15. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

பகுதி 15
பிரபாகரன் தான் குட்டிமணி தங்கதுரையைக்,காட்டிக் கொடுத்ததாக குட்டிமணி கூறியதாக கரிகாலன் எங்களிடம் கூறினார்

டெல்லி அனுபவத்தை தொடரும் முன் நினைவில் வந்த சென்னை அனுபவங்கள்.

Telo குட்டி மணிக்கு வழக்கு பேசிய வக்கீல் கரிகாலன் என்கிற நவரட்ணம் நமது எம்எல்ஏ ஹாஸ்டல் அறைக்கு வந்து கொண்டு வந்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். அப்போது அவர் பிரபாகரன் தான் குட்டிமணி தங்கதுரையைக்,காட்டிக் கொடுத்ததாக குட்டிமணி கூறியதாக எங்களிடம் வக்கீல் கரிகாலன் என்கிற நவரட்ணம் கூறினார்.

அதன் பின்பு அவர் அதை ஜூனியர் விகடனிலும் எழுதினார்.

கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று ஒரு படம் வந்தது. அந்த பட டைரக்டர் ஜெமினி கணேசனின் மருமகன் என நினைக்கிறேன். பெயர் நினைவில் இல்லை சந்ததியாரை சந்தித்து ஆனந்த் மினி தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டினார். சந்ததியார் போகும் போது கந்தசாமியும் என்னையும் கூட்டிக்கொண்டு போனார். சந்ததியார் சுவராசியமாக பட இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தார். எம்ஜிஆர் பட ரசிகர்களான நாங்கள் பட்ட பாடு.

மாணிக்கதாசன் காலை நேரம் டெல்லி வந்தார். தூங்கப் போவதாகக் கூறி, மாணிக்கதாசன் தூங்கப் போகும் போதும் எழுப்பும் போதும் அவரை காலால் மிதித்து மிதித்து எழுப்ப வேண்டும்.

காரணம் சிறையில் வாங்கிய அடிகளால் நரம்புகள் பலவீனப்பட்டு இருந்தன. மிதிக்க விட்டால் அவரால் தூங்க முடியாது.

நானும் மாணிக்கதாசன் நிலைமைகளை அலசி ஆராய்ந்து இந்த PLOபயிற்சியை விட்டுவிடக் கூடாது. தான் உடனடியாக பாகிஸ்தான் போய், அங்கிருந்து சிரியா போவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், டில்லிக்கு பயிற்சிக்கு வருபவர்களை பாகிஸ்தான் லாகூருக்கு கூட்டிக் கொண்டு வரும்படியும், பெரியவர் (உமா மகேஸ்வரன்)வேண்டாம் என்று தட்டி கழித்தாலும், அவருக்கு நம்பிக்கையூட்டி, தாசன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக கூறினார் என்று கூறி,என்னை பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு கூட்டி கொண்டு வரும்படி கூறினார்.

உடனடியாக திலக் மூலம் என்னிடமிருந்த பாஸ்போர்ட்டுகள் ஒன்றை எடுத்து தலை மாற்றி கள்ள விசா அடித்து கொண்டு, தாசன் பாகிஸ்தானில் விற்பனை செய்ய வெற்றிலை கட்டுகளும், சின்னசின்ன விஸ்கி பாட்டில்களும் வாங்கிக் கொண்டு, தாசன் டெல்லி பாலம் விமான நிலையம் மூலம் பாகிஸ்தான் லாகூருக்கு பயணமானார்.

இத் தகவலை சென்னையிலிருந்த உமாவுக்கு பரிமாறினேன் . அடுத்து வரும் நாட்களில் தோழர்களை அனுப்புவதாக கூறி, தான் விமானம் மூலம் டெல்லி வருவதாகவும் டெல்லியில் சந்திக்க வேண்டியவர்களை தான் சந்திக்க ஏற்பாடு செய்யும்படியும் கூறினார்.

மூன்றாம் நாள் ரயிலில் வந்த தோழர்களை எட்டு பேரா,பத்து பேரா நினைவிலில்லை. 8 பேர் என தான் நினைக்கிறேன். கந்தசாமி , சீசர், சிறையை உடைத்து வந்த சுபாஷ், சுபாஷின் நண்பர் பேர் மறந்து விட்டேன் மட்டக்களப்பு மாமா என்று கூறுவார்கள். ஜெர்மனியில் இருந்து வந்தவர். அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி கொழும்புக் கிளை தலைவராக இருந்த இலங்கை வங்கியில் வேலை செய்த ரகுபதி பால ஸ்ரீதரனின் தம்பி. ரகுபதிபால சிறிதரனின் மனைவியும் மாமனாரும் ரேடியோ சிலோனில் வேலை செய்தவர்கள். அவரின் மாமனார் ரேடியோ மாமா என்று கூறுவார்கள். பெயர் சண் என்றழைக்கப்படும் சண்முகநாதன் என்ன நினைக்கிறேன். இவர்களோடு கண்ணன். மட்டக்களப்பு ஜெயில் வார்டனாக இருந்த தோழரும் வந்ததாக நினைவு.

அடுத்தடுத்து பயிற்சிக்கு போனவர்கள் தான் இதைப் பற்றி கூறவேண்டும். மாணிக்கம் தாசன் லாகூர் ஓட்டல் விலாசத்தைக் கூறி உடனே எங்களை வரச் சொன்னார். தோழர்கள் டெல்லி வந்த பின் அடுத்த நாள் உமா மகேஸ்வரன் டெல்லி வந்தார் நானும் கந்தசாமியும் விமான நிலையம் போய் கூட்டிக் கொண்டு வந்தோம்.

எல் கணேசன் எம்பி வீட்டில் எல்லோரும் தங்கியிருந்தோம். அங்கிருந்த எல் கணேசன் உறவினர் எங்களுக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்தார். நாங்கள் தங்கியிருந்த எம்பி வீட்டில் ஒரு பகுதியில் திருச்சியைச் சேர்ந்த சித்தார்த்தன் ( இது வேறு சித்தார்த்தன் / கூட்டமைப்பு சித்தார்த்தன் அல்ல) என்பவரும் குடும்பத்தோடு தங்கியிருந்தார். இவர் இந்திய ராணுவ தலைமையகத்தில் சிவில் அதிகாரியாக பணி புரிந்தார்.

அங்கிருந்த எல்லா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளிலும் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சு வெளிவிவகாரத் துறை அமைச்சர் போன்ற இந்தியமத்திய அரசு அலுவலங்களில் உயர் பதவியில் இருக்கும் தமிழர்கள் வாடகைக்கு குடி இருந்தார்கள்.

எல்லோரும் அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு உதவி செய்வதில் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்தவர்கள் தான்.

உமாவும், நானும் ஜி.பார்த்தசாரதிஅவர்களை போய் பார்த்து போது அவர் உமாவுக்கு பல புத்திமதிகளை கூறினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். காரணம் தமிழ்நாடு அரசாங்கம் எப்ப தவறுவிடுவீர்கள் என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மத்திய அரசுக்குத்தான் கெட்ட பெயர்.

 

பின்பு நாங்கள் இந்து பத்திரிகையின் G.K ரெட்டி அவர்களையும் பார்த்தோம். பின்பு முதல் முறையாக ரா உளவு அமைப்பின் தென்னாசிய பிரிவுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் அதிகாரியே சந்தித்தோம் இவர்தான் இலங்கை பிரச்சனைக்கும் பொறுப்பாக இருந்தார் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்.

ஆரம்பத்தில் என்னை பற்றி விசாரித்தவர் தேநீர் எல்லாம் குடித்த பின்பு, அவர் உமாமகேஸ்வரனுடன் தனிமையில் கதைக்க விரும்பினார். நான் வெளியில் போய் விட்டேன்.

பிற்காலத்தில் உமாமகேஸ்வரன் சார்பாக டெல்லியில் நான்தான் சந்திப்பேன். எங்கள் சந்திப்பு டெல்லியில் தசா  பிரகாஷ் ஹோட்டலில் நடந்தது.

லண்டனிலிருந்து கிருஷ்ணன் உமாவின் நண்பர் , இலங்கை சுங்கத் துறை முக்கிய அதிகாரி விக்னேஷ் ராஜா அவர்கள் சென்னை போவதாகவும்,  டெல்லி ஏர்போர்ட்டில் அவரை சந்திக்கும் படியும் கூறினார்.

உமா, நான், கந்தசாமி மூவரும் விமான நிலையம் போய்,  விக்னேஷ் ராஜாவையும் அவரது மனைவியையும் சந்தித்தோம். அப்போது அவர் எங்களுக்கு பெருந்தொகையான சாக்லெட்டுகளை கொடுத்தார்.

இதற்கிடையில் பாஸ்போர்ட் செய்வதற்கு உமா உட்பட மற்றவர்களுக்கும் பாஸ்போர்ட் எடுக்க போட்டோ எடுத்து கள்ள பாஸ்போர்ட் தயாரித்தோம். எனக்கும் ஜெர்மனியில் இருந்து வந்த தோழருக்கும் ஒரிஜினல் பாஸ்போர்ட், கள்ள விசாதான் அடிக்க வேண்டும். அதோடு பாகிஸ்தான் கொண்டு போக வெற்றிலை கட்டுகளும், விஸ்கி பிராந்தி பாட்டில்கள் வாங்கி வைப்பதிலும் பொழுது விடிந்தது.

அடுத்த நாள் மாலை இந்தியன் ஏர்லைன்ஸில் லாகூர் பயணம். வெற்றிலை கட்டுகளையும் விஸ்கி பிராந்தி பாட்டில்களையும் உடம்பில் மறைவாக வைத்துக் கொண்டோம். உமா இடம் ஒன்றும் கொடுக்கவில்லை. நமது பயணம் தொடங்கிவிட்டது.

டெல்லி ஏர்போர்ட்டில் இமிக்ரேஷனpல் 10 – 10 டாலர் லஞ்சம் கொடுத்து எமது பயணம் தொடர்ந்த  போது எல்லோரது முகத்திலும் பயம் தான் தெரிந்தது.

தொடரும் ……


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.