மாகாண சபை தேர்தலின் பின் புதிய அரசமைப்பு – பிரதமர் வாக்குறுதி.

மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட அரசு கடமைப்பட்டிருப்பதாகவும், இதற்கான நிறுவனக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் தோல்வியடைந்ததால் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொள்ளாததற்கு கடந்த காலங்களில் அந்த அலுவலகங்கள் பெயரளவிலேயே ஸ்தாபிக்கப்பட்டமைதான் காரணம் என்றும் பிரதமர் தெரிவித்தார். காணாமல்போனோர் தொடர்பான வழக்குகள் 16 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது இலகுவான விடயமல்ல என்றாலும் நீதியை நிலைநாட்ட அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்றும் உறுதியளித்த பிரதமர், இது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க விசேட குழு நியமிக்கப்படும் என்றார். பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீட்சி பெற்ற பின்னரே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும், மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.