அமெரிக்காவுடன் வணிகம் செய்பவர்களுக்கு சீனாவின் எச்சரிக்கை: வர்த்தகப் போர் தீவிரமடையும் அபாயம்.

அமெரிக்காவுடன் பெரிய அளவிலான பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் நலன்களைப் பாதிக்கும் வகையில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பெய்ஜிங் பதிலடி நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று சீன வர்த்தக அமைச்சகம் திங்களன்று (ஏப்ரல் 21) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் சீனாவுடன் வர்த்தக உறவுகளைக் குறைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு வரி விதிப்புகளைக் குறைக்கவும் நீக்கவும் திட்டமிட்டு வருவதாக ‘புளூம்பர்க்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி சீன வர்த்தக அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே நீடித்து வரும் சீன-அமெரிக்க வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையக்கூடும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு வர்த்தக வரிகளை விதித்துள்ளார். மேலும், பல உலக நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கும் அடிப்படை வரியை அவர் விதித்துள்ளார்.
இருப்பினும், சீனா தவிர மற்ற உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகளை அதிபர் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா 125 சதவீதம் வரி விதித்துள்ளது.
“சமநிலை என்ற போர்வையில் அமெரிக்கா தனது வர்த்தகப் பங்காளிகளை அச்சுறுத்துகிறது. இதன் விளைவாக, உலக நாடுகள் வேறு வழியின்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன,” என்று சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.
“சீனா தனது கொள்கையிலும், தேசிய பாதுகாப்பிலும் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், உலக நாடுகளுடன் ஒற்றுமையாக இருக்கவும் சீனா தயாராக இருக்கிறது,” என்று சீன வர்த்தக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
“இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உலக நாடுகள் அமெரிக்கா பக்கமோ அல்லது சீனா பக்கமோ சாயத் தயாராக இல்லை. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இரு நாடுகளும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் நடுநிலையாக செயல்பட்டு ஒரு தீர்வை காண வேண்டியது அவசியம்,” என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.