“நிவாரணம் வழங்க வேண்டுமென்றால், அனைவரும் இரண்டு மூன்று வருடங்கள் தியாகம் செய்ய வேண்டும்” – ஜனாதிபதி

பொதுமக்களுக்கு பொதுவாக நிவாரணம் கிடைக்கும் ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டுமென்றால், அனைவரும் இரண்டு மூன்று வருடங்கள் ஒன்றாக அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
“முதல் முறையாக, மக்களின் பணத்தை ஒரு சதம் கூட வீணாக்காத அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. அதனால்தான் உள்ளூர் அரசியலையும் புதிய முறையில் மாற்ற வேண்டும். கோடிக்கணக்கில் திருடிய ஆட்சியாளர்கள் இருந்த நாடு இது. பொருளாதார ரீதியாக இவ்வளவு பெரிய பள்ளத்தில் விழ ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் ஆகியவை காரணமாக அமைந்தன.
முதல் முறையாக, ஊழல், மோசடி, வீண்விரயம் இல்லாத மத்திய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ஊழல், மோசடியற்ற உள்ளூர் அரசியல் அதிகாரத்தை உருவாக்குவது அவசியம். இந்த மாற்றத்தை ஏற்படுத்த அதிபர், நாடாளுமன்றம், பிரதேச சபைகள், மாநகரசபைகள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
எனவே, இந்த மாற்றங்களை ஏற்படுத்த நாம் அனைவரும் போராட வேண்டும். பொதுவாக குடிமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் இரண்டு மூன்று வருடங்கள் ஒன்றாக அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும்.” என்றார் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க.