கொரோனாவினால் மரணித்தவர்கள் எனக்கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்தல்

சர்வதேச ரீதியில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த பிரேசில் நாட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸினால் பலியானவர்களின் உடல்களை கொண்டு செல்வதாக கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்திய நபரை பிரேசிலின் மடோ க்ரஹோ டி சுலா மாகாண பொலீசார் கைது செய்துள்ளனர்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த காரினை சோதனைக்குட்படுத்தியபோது காரின் சாரதி கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்தியசாலையிலிருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் தனியார் அமைப்பு ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சாரதி, இருவரின் சடலங்களை எடுத்து செல்வதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த நபரிடம் தனது ஆள் அடையாள அட்டையை காட்டுமாறும், உயிரிழந்தவர்களின் விவரங்களை தரும்படியும் போலீசார் கேட்டதனை தொடர்ந்து சாரதி முன்னுக்கு பின் முரணாக தகவல்களை அளித்துள்ளார்.

இதனையடுத்து காரினை பரிசோதித்த போது சவப்பெட்டிக்குள் இருந்து 290 கிலோ கிராம் அளவான போதை பொருட்கள் இருப்பதனை கண்டு பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள காரின் சாரதிக்கு குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 15 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்க நேரிடும்.

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 47 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளதுடன், தினமும் சராசரியாக 1000 பேர் மரணமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.