கொழும்பில் சுவிஸ் தூதர் இல்லத்தில் ரூ. 45 லட்சம் தங்க நகைகள் திருட்டு

இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரின் இல்லத்தில் இருந்து 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.
கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸில் சுவிட்சர்லாந்து தூதர் 29ம் திகதி அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தூதர் கடந்த 12ஆம் திகதி சுவிட்சர்லாந்து சென்றுவிட்டு, நேற்று முன்தினம் 27ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளார். அந்த காலகட்டத்தில் அவரது இல்லத்தில் ஐந்து பேர் கொண்ட ஊழியர்கள் பணிபுரிந்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸார் அந்த ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தூதரின் இல்லத்தின் மேல் மாடியில் இருந்த பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த வைரக்கல் பதித்த மோதிரம், டவர் மெலட்டின் கல் பதித்த மோதிரம், பச்சைக்கல் பதித்த மோதிரம் மற்றும் தங்க மாலை, வெள்ளை தங்க கைவளையல், தங்க திருமண மோதிரம், ரூபி கல் பதித்த தங்க மோதிரம், தங்க பதக்கம், நீலக்கல் பதித்த தங்க தோடு ஜோடி, ஒமேகா லேடிமேட்டிக் ரக கைக்கடிகாரம், ஒமேகா ரக தங்க கைக்கடிகாரம் உள்ளிட்ட தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தூதர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
கொழும்பு தெற்கு பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் லூஷன் சூரியபண்டாரவின் அறிவுறுத்தலின் கீழ், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் சிலோகம தலைமையில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.