கிளிநொச்சியின் 3 சபைகளும் தமிழரசு வசமாகும்! – பெருந்திரளான மக்கள் பங்கேற்ற இறுதிப் பரப்புரையில் சிறீதரன் எம்.பி. உறுதி.

டைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்பது வட்டாரங்களையும் வென்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியே ஆட்சியமைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்போடு நடைபெற்ற இறுதிப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற எங்களின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் உள்ளூர் அதிகாரங்களைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக நாங்களே இருக்க வேண்டும். ஆட்சிப்பீடம் ஏறி ஆறு மாதங்கள் கடந்தும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த எந்தச் சமிக்ஞைகளும் அரச தரப்பிலிருந்து எழவேயில்லை என்றபோதும் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இந்த அரசோடு பேசுவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.” – என்றார்.

கிளிநொச்சி நகர வர்த்தகர் சங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் செல்வராணி சோமசேகரம்பிள்ளை, வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, மேனாள் தவிசாளர்களான அருணாசலம் வேழமாலிகிதன், சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், சுப்பிரமணியம் சுரேன், கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் தனபாலன் குவேந்திரன், வேட்பாளர்களான ஜெலானி தர்மராசா, ஷாலினி சாருகன் ஆகியோர் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.