ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிப்பு!

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தகா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் மே 8 ஆம் தேதி இரவு 11 மணியளவில், பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் பெரிய அளவிலான பயங்கரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டிருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.