பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” உள்பட 3 விமான தளங்களை தாக்கிய இந்தியா : வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” உள்பட 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்து வான்வெளியை முழுவதுமாக பாகிஸ்தான் மூடியுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, மே 7 ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராணுவ மோதலால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய தளமான ராவல்பிண்டி “நூர் கான்” விமானப்படை தளம், சக்வால் நகரில் உள்ள முரிட் விமானத் தளம் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃபிகி விமானத் தளம் என மூன்று விமானப்படை தளங்களையும் இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

நூர் கான் விமானத் தளம்

நூர் கான் விமான தளத்தில்தான் பாகிஸ்தான் ராணுவத்துக்கான பல்வேறு தளவாடங்கள் கிடங்கு மற்றும் எரிபொருள் நிரப்பும் மையமாக செயல்படுகிறது. இது விமானப்படை நடவடிக்கைகள் மற்றும் விஐபிகளுக்கான போக்குவரத்து பிரிவுகளாகவும் செயல்படுகிறது.

ரஃபிகி விமானத் தளம்

ரஃபிகி விமானத் தளம் பாகிஸ்தானின் முக்கிய போர் விமானத் தளங்களில் ஒன்றாக செயல்படுகிறது, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜேஎஃப்-17 போர் விமானங்கள், பிரான்சில் கட்டமைக்கப்பட்ட மிராஜ் 5 போர் விமானங்கள் உள்ளிட்ட போர் விமானங்களின் தளங்களாக உள்ளது.

முரிட் விமானத் தளம்

முரிட் விமானத் தளம் பாகிஸ்தானின் முதன்மையான ஆளில்லா வான்வழி வாகன தளமாகும். இது கிட்டத்தட்ட போர் ட்ரோன் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஷாபர் I, ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கான நெஸ்காம் புராக் யுஏவி மற்றும் துருக்கியில் தயாரிக்கப்பட்ட பைரக்டர் ட்ரோன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கடற்படையை இது இயக்குகிறது. குறிப்பாக உக்ரைன்-ரஷியா மோதலில் விரிவான போர் பயன்பாட்டைக் கண்டுள்ளது.

பாகிஸ்தான் வான்வெளி முழுவதுமாக மூடல்

பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதுடன், தாக்குதலுக்கு போர் மற்றும் வணிக விமானங்களை பயன்படுத்துவதாகவும், ட்ரோன் மற்றும் ஏவுகணை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பாகிஸ்தான் தனது வான்வெளியை திறந்து வைத்திருப்பதன் மூலம் சர்வதேச விமான போக்குவரத்தை ஆபத்தில் ஆழ்த்துவதாக இந்தியா குற்றம் சாட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் சனிக்கிழமை அனைத்து விமானப் போக்குவரத்திற்கான அனைத்து வான்வெளி எல்லைகளையும் முழுவதுமாக மூடியது.

Leave A Reply

Your email address will not be published.