கல்கிஸை இளைஞர் சுட்டுப் படுகொலை: இருவர் கைது!

கொழும்பு – கல்கிஸைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கல்கிஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கல்கிஸை மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 மற்றும் 32 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்கிஸை, சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த 5 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றுக்கு முன்னால் இருந்த இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றனர்.
இதன்போது அந்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்று நீ்ண்ட தூரம் ஓடினார்.
ஆனால், துப்பாக்கிதாரிகள் இளைஞரைத் துரத்திச் சென்று நடுவீதியில் வைத்து சுட்டுக் கொலை செய்தனர்.
தெஹிவளை, ஓபன் பிளேஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்தார் எனக் கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் கல்கிஸை பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.