சிப்ஸ் தகராறில் 6ஆம் வகுப்பு மாணவன் 14 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

சிப்ஸ் தராததால், 6ஆம் வகுப்பு மாணவன் 14 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ஹூப்ளியின் குருசித்தேஷ்வர் நகரில், 14 வயதான சேத்தன் ரக்கசாகி மற்றும் 12 வயதான சாய் வசித்து வந்துள்ளனர்.

ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்கள் இருவருக்குமிடையே, கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, 5 ரூபாய் சிப்ஸ் பொட்டலத்தை பகிர்வதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த 6 ஆம் வகுப்பு சிறுவன் சாய், தனது வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து, 8 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியுள்ளான்.

உடனடியாக, சிறுவனின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 6 ஆம் வகுப்பு மாணவனான சாய்யை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

இது தொடர்பாக பேசிய காவல் ஆணையர் சசி குமார், “ஒரு 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு, அடுத்தவரை கத்தியால் குத்தும் மனநிலை கொண்டிருப்பது துர்திஷ்டவசமானது.

தொலைக்காட்சியில் பார்க்கும் வன்முறை நிறைந்த படங்கள் பார்ப்பது, சண்டைகள் நிறைந்த வீடியோ கேம் விளையாடுவது, குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட விளைவு காரணமாக இது நடந்திருக்கலாம். இந்த சம்பத்தில் இருந்து அனைவரும் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.