பெங்களூரு தத்தளிப்பு : கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச மழைப்பொழிவு!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் இரண்டாவது அதிகபட்ச மழைப்பொழிவு நேற்று(மே 20) பதிவானது. 105.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.

பெங்களூரில் ஹொரமாவு, டேனரி சாலை, ஜெயநகா், ஈஜிபுரா, லக்கசந்திரா, ஜக்கசந்திரா, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகள் மழையால் வெகுவாகப் பாதிப்படைந்தன. வீடுகளில் புகுந்த வெள்ளத்தை பொதுமக்கள் வெளியேற்றினர்.

வாகனங்கள் நீரில் மூழ்கின. நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் தத்தளித்த பொதுமக்களை மீட்புக்குழுவினர் படகுகளை கொண்டுவந்து மீட்டனர்.

ஜெயநகரில் மரம் சரிந்து விழுந்ததில் சாலையில் நின்றுகொண்டிருந்த காா், ஜீப் சேதமடைந்தன. இந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. கப்பன் சாலையிலும் நான்கு மரங்கள் சாலையில் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் பெய்த மழையில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சசிகலா (35) பலியானார். மேலும் மின்சாரம் பாய்ந்து இருவர் பலியாகினர்.

திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி வரை பெங்களூரில் வெயில் கொளுத்திய நிலையில், மாலை 3 மணி முதல் 6 மணி வரை மீண்டும் பரவலாக மழை பெய்தது.

Leave A Reply

Your email address will not be published.