தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் – சபாநாயகரையும் நேரில் சந்தித்துப் பேச்சு.

நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் கயந்த கருணாதிலக, சிவஞானம் சிறீதரன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், கே.காதர் மஸ்தான், திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ஜே.சி. அலவத்துவல, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, வைத்தியர் ப.சத்தியலிங்கம், நிஸாம் காரியப்பர் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில் நாட்டு மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொதுச் சேவையை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது என்று கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக மீண்டும் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக காலையில் சபாநாயகரைச் சந்திக்க எதிர்க்கட்சிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பணிகளை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் சபாநாயகருக்கு உள்ளதை வலியுறுத்த வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

எழுந்துள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்குப் பொலிஸ்மா அதிபரையும், பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளரையும் உடனடியாக நாடாளுமன்றத்துக்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் கோர வேண்டும் என கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர். அதன்படி சபாநாயகரைச் சந்தித்த கட்சித் தலைவர்கள் குறித்த முடிவுகள் மற்றும் யோசனைகள் குறித்து சபாநாயகருக்குத் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.