யாழில் 769 வழித்தட சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதிகள் இன்று போராட்டம்.

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பஸ்கள் கடந்த காலங்களில், வசாவிளான் சந்தியில் இருந்து, பருத்தித்துறை – பொன்னாலை வீதி வரையிலான பலாலி வீதி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்டமையால், வசாவிளான் சந்தியுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்தி இருந்தன.

அதனால் மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, யாழ்ப்பாணம் நகரில் இருந்து புறப்படும் 769 வழித்தட பஸ்கள் மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட்டன.

தற்போது உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் செல்லும் பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமையால், யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 வழித்தட பஸ்கள் யாழ்ப்பாணம் நகரில் இருந்து புறப்பட்டு பலாலி வீதியூடாக பருத்தித்துறை – பொன்னாலை வீதியை அடைந்து அதனூடாக காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பஸ் நிலையம் வரையில் சேவையில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில் 769 வழித்தட அனுமதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தாம் இதுவரை காலமும் மயிலிட்டியில் இருந்து சேவையை ஆரம்பித்தது போன்று ஆரம்பிக்கவும், யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு, காங்கேசன்துறை வீதி வழியாக மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 30ஆம் திகதி வடக்கு மாகாணஆளுநர் தலைமையில் தனியார் பஸ் சேவை வழித்தடம் தொடர்பான கூட்டம் இடம்பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எனவே, குறித்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாட ஆளுநர் போராட்ட இடத்துக்கு வர வேண்டும் என்று பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இறுதியாக பொலிஸார் தலையிட்டு வழமை போன்று சேவையில் ஈடுபடுமாறு கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.