பாடசாலை சென்ற மாணவி பட்டா ரக வான் மோதி சாவு! – முல்லைத்தீவில் சோகம்.

முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணிப் பகுதியில் இன்று காலை பட்டா ரக வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கர்நாட்டுக்கேணி அ.த.க. பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்கும் எட்டு வயதுடைய மாதீஸ்வரன் நர்மதா என்ற மாணவியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்நாட்டுக்கேணிப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 7 மணியளவில் மேற்படி மாணவி பாடசாலைக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி சாவடைந்துள்ளார்.

அந்த மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பிச் சென்றபோது கொக்குளாயில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்ற பட்டா ரக வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபரை கொக்கிளாய் பொலிஸ் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை ஆரம்பிக்கும், முடிவடையும் வேளைகளில் குறித்த கர்நாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் யாரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவதில்லை என்று அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரித்துள்ளனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொக்குத்தொடுவாய் பகுதியில் விபத்தை ஏற்படுத்தியிருந்தார் என்றும், அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்றும் அந்தப் பகுதி மக்களால் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.