கொழும்பு மாநகர சபையில் சஜித் அணியே ஆட்சி! – நளின் பண்டார கூறுகின்றார்.

“கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அரசுக்கு வழங்கப் போவதில்லை. எதிரணிகளின் ஒத்துழைப்புடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியே மலரும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
” கொழும்பு மாநகர சபை தொடர்பில் கட்சிகளுடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றோம். பல கட்சிகள் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளன. எனவே, கொழும்பில் ஆட்சியை அரசு இழக்கும்.
அரசுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த சில சுயாதீனக் குழுக்கள் எம்மையும் சந்தித்துள்ளன. எனவே, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலேயே கொழும்பு மாநகரில் ஆட்சி அமையும். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரே மேயர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். ஏனைய கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். உரிய வகையில் சரியான முடிவு எடுக்கப்படும்.” – என்றார்.