பூநகரியில் அரச காணியில் அத்துமீறல்: தடுக்கச் சென்றவர்களுக்கு மிரட்டல்!

கிளிநொச்சி, பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதக் கடைகளை அகற்றச் சென்ற பூநகரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் நாச்சிக்குடா சந்திக்கு அருகாமையில் உள்ள அரச காணிகளுக்குள் நேற்று வியாழக்கிழமை இரவு அனுமதியற்ற முறையில் தற்காலிக கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில இரும்பினால் ஒட்டப்பட்ட கடைகளாகவும் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச சபை செயலாளர், வருமான வரி பரிசோதகர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் குறித்த இடத்துக்குச் சென்று அனுமதியற்ற கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் அது தொடர்பான அறிவித்தல்களையும் கடைகளில் ஒட்டியுள்ளனர்.
அந்நேரம் , கும்பல் ஒன்று, அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு, அவர்களைக் காணொளி எடுத்துள்ளார்கள்.
அதேவேளை, பூநகரி பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டுமானப் பணிகள், அரச காணிகளில் அத்துமீறிய செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பூநகரி பிரதேச சபை செயலாளர் ரத்தினம் தயாபரன் தெரிவித்துள்ளார்.