கொழும்பு மாநகரை என்.பி.பியே ஆளும் – ரில்வின் சில்வா திட்டவட்டம்…

“ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே கொழும்பு மாநகர சபையை ஆட்சி செய்யும்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், ஜே.வி.பியின் பொதுச்செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. எனவே, தேசிய மக்கள் சக்தியே கொழும்பு மாநகர சபையை ஆளும். அதேவேளை, அங்கு பல கட்சிகள், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு நேரடியாக ஆதரவைத் தெரிவித்தும் வருகின்றன. முதலாவது சபை அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் மேயர் பதவியேற்பார்.
இந்நிலையில், கொழும்பு மாநகர சபையில் தாம்தான் ஆட்சி அமைப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் வீரவசனம் பேசி வருகின்றனர். சஜித் அணியினரின் இந்த வீரவசனம் செல்லுபடியாகாது. கடந்த மூன்று தேர்தல்களிலும் இப்படித்தான் அவர்கள் வீரவசனம் பேசி படுதோல்வியடைந்தனர்.” – என்றார்.