அடுத்த ஆண்டு அநுர அரசு வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் – இப்படி அடித்துக் கூறுகின்றது சஜித் அணி.

“அநுர அரசுக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என அரச அதிகாரிகளும், நிறுவனத் தலைவர்களும், துறைசார் நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அடுத்த ஆண்டு இந்த நாளில் நாட்டு மக்களால் அநுர அணியினர் ஆட்சியில் இருந்து துரத்தியடிக்கப்படுவார்கள்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அரசின் பயணம் சிறப்பானதாக இல்லை எனத் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களே கூறுகின்றனர். நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கின்றதா என்றும் தெரியவில்லை.
மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசிடம் எந்தப் பதிலும் இல்லை. கொள்ளையற்ற அனுபவமற்ற இந்தக் குழுவிடம் நாட்டைக் கையளித்தால் என்னவாகும் என்பதை அன்றே நாம் தெரிவித்திருந்தோம்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 23 இலட்சம் வாக்குகளை இழந்திருக்கின்றது. நாம் மேலதிகமாக 3 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம். இந்த அரசுக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என அரச அதிகாரிகளும், நிறுவனத் தலைவர்களும், துறைசார் நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அடுத்த ஆண்டு இந்த நாளில் நாட்டு மக்களால் அநுர அணியினர் ஆட்சியில் இருந்து துரத்தியடிக்கப்படுவார்கள்.
சுயேச்சைக் குழுக்களுடன் ஒப்பந்தம் செய்து கொழும்பு மாநகர சபையில் அரசு ஆட்சியமைத்து, தோல்வியடைந்த அந்தப் பெண் வேட்பாளரிடம் கொழும்பு ஒப்படைக்கப்பட்டால் அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இந்த அரசின் வீழ்ச்சி ஆரம்பமாகும். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த ஆதரவாளர்களாலேயே இந்த அரசு வீழ்த்தப்படும்.
மக்களுக்கு உப்பினைக் கூட வழங்க முடியாதுள்ள அநுர அரசு ஏனைய காரணிகள் குறித்துப் பேசுவதில் பயன் என்ன? எதிர்க்கட்சிகளுக்குப் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பிருக்கின்றது என்றால், ஆதரத்துடன் அதனை நிரூபித்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றேன்.
தேசிய மக்கள் சக்திக்க வாக்களித்தவர்களே நாடு தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். அந்தப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கின்றோம்.” – என்றார்.