வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு கடந்த அரசின் செயற்பாடுகளே காரணம்! – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.

கடந்த அரசாங்கத்தின் விளைவுகளால் நோயாளர்கள் இன்று அவதிப்படுகின்றனர் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 65 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுவதுடன், 35 சதவீதமானவையே நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தக் கொள்வனவு செயன்முறைக்குக் கால அவகாசம் தேவைப்படும்.

இந்த வருடத்தின் பயன்பாட்டுக்கான மருந்துகளில் 67 வகையான மருந்துகளுக்கு மாத்திரமே கடந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் முந்தைய அரசாங்கம் பொருட்கோடலை சமர்ப்பித்திருந்தது.

முறையாக, மருந்து கொள்வனவு செயன்முறையை முன்னெடுக்காதமையினால் ஏற்பட்ட பின்விளைவுகளையே தற்சமயம் வைத்தியசாலைகளில் சந்திக்க நேரிட்டுள்ளது.

சர்வதேச சுகாதார அளவுகோல்களின் அடிப்படையில் இலங்கைக்கு ஓர் உயர்வான இடம் உள்ளதுடன், அதனைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையிலிருந்து, 2 வருட ஒப்பந்த அடிப்படையில் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குக் குவைத் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.