மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல்வேறு இடங்களில் 552 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், நிலச்சரிவினாலும் கடுமையான மழையாலும் 152 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து சுமார் 198 குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், அப்பகுதிகளில் சிக்கியிருந்த 92 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் சுவர் இடிந்த சம்பங்களில், சம்பாய் மாவட்டத்தில் 3 பேர் மற்றும் அய்சால், செர்ச்சிப் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், தென் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருள்களைக் கொண்டுச் சென்ற 100-க்கும் மேற்பட்ட லாரிகள் செர்ச்சிப் மாவட்டத்தில் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிசோரமின் 11 மாவட்டங்களில், மியான்மர் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துக்கொள்ளும் சம்பாய் மாவட்டத்தில் அதிகப்படியாக 209 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், கடந்த 3 நாள்களில் மட்டும் அய்சால் மாவட்டத்தில் 253.7 மி.மீ. அளவிலான மழைப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.