வலி. தென்மேற்கு பிரதேச சபையும் தமிழரசு வசம் – தவிசாளராகக் கந்தையா யசீதன் தெரிவு.

யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த கந்தையா யசீதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

28 உறுப்பினர்களைக் கொண்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 5 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலா 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக கந்தையா யசீதன் முன்மொழியப்பட்டார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் நாகராசா பகீரதன் முன்மொழியப்பட்டார்.

தவிசாளர் தெரிவுக்கான பகிரங்க வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கந்தையா யசீதன் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் 13 வாக்குகளையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட நாகராசா பகீரதன் 9 வாக்குகளையும் பெற்றனர். 6 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

இதன் மூலம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த கந்தையா யசீதன் தெரிவானார்.

உப தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பேரின்பநாயகம் சுபாகர் தெரிவானார்.

Leave A Reply

Your email address will not be published.