ஊர்காவற்றுறை பிரதேச சபை ‘சைக்கிள்’ வசம் – தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு.
யாழ். ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறை மூலம் தெரிவாகியுள்ளார்.
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று காலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

13 ஆசனங்களைக் கொண்ட ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா 3 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும் , ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஓர் ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இன்றைய தவிசாளர் தெரிவின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஜெகதீஸ்வரன் யுகந்தனும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் அன்னலிங்கம் அன்னராசாவும் முன்மொழியப்பட்டனர்.
பகிரங்க வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் யுகந்தனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 4 வாக்குகளும் கிடைக்க மொத்தமாக 5 வாக்குகளைப் பெற்றார்.

மேலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அன்னலிங்கம் அன்னராசாக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு வாக்கும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் 3 வாக்குகளும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஒரு வாக்குகளும் கிடைக்க மொத்தமாக 5 வாக்குகளைப் பெற்றார். தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும் நடுநிலைமை வகித்தனர்.
தவிசாளர் தெரிவில் போட்டியிட்ட இருவருக்கும் சமமான வாக்குகள் கிடைக்கப் பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு முறை மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா தவிசாளராகத் தெரிவானார்.
உப தவிசாளராக செபஸ்தியான்பிள்ளை லெனின் ரஞ்சித் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளராகப் போட்டியிட்ட ஜெகதீஸ்வரன் யுகந்தனை தமிழரசுக் கட்சின் மற்றைய உறுப்பினர் தவிசாளராக முன்மொழிய மறுத்த நிலையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினரே முன்மொழிந்து வழிமொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
