வேலணை பிரதேச சபை தமிழரசிடம் – தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் ஏகமனதாகத் தெரிவு.

வேலணை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிவலிங்கம் அசோக்குமார் ஏகமனதாகத் தெரிவானார்.

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வேலணை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, சுயேச்சைக் குழு – 1, சுயேச்சைக் குழு – 2, சுயேச்சைக் குழு – 3 என்பன தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.

இன்றைய தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சிவலிங்கம் அசோக்குமார் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார்.

இதன்போது சுயேச்சைக் குழு உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தார்.

சபையில் தவிசாளருக்கு வேறு எந்தத் தெரிவுகளும் முன்மொழியப்படாத நிலையில் சிவலிங்கம் அசோக்குமார் தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை வசந்தகுமார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.