செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் நாளை மாபெரும் போராட்டம்.
“யாழ். செம்மணியில் நாளை திங்கட்கிழமை முதல் 3 தினங்களுக்குத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள ‘அணையா விளக்கு’ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளை மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றேன்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் – கோட்டைக்கல்லாறு பாலத்துக்கு அருகாமையில் நாளை திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு தீப்பந்தங்கள் ஏந்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதில் எங்களுடைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் அனைத்து உணர்வாளர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பை விடுக்கின்றோம்.
செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி ‘அணையா விளக்கு’ போராட்டம் யாழ்ப்பாணத்தில் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக – அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் இந்த மாபெரும் போராட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அந்தவகையில் கட்சி பேதங்கள் இன்றி எங்களுடைய அனைத்து தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார்.
