செம்மணியில் ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் பங்கேற்க தமிழரசு உறுப்பினர்களுக்கு தலைவர் சி.வி.கே. அழைப்பு.
“யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி ஆய்வு தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு சர்வதேச நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ‘மக்கள் செயல்’ என்ற தன்னார்வ இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ‘அணையா விளக்கு’ மூன்று நாள் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் யாவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை கலந்துகொண்டு எமது கட்சியின் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது நாம் ஒற்றுமையாக செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதிக்கான கோரிக்கையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியையும் வலியுறுத்தி இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பது மிக முக்கியமானது.” – என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.
