குச்சவெளி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசம் – தவிசாளராக முபாரக் தெரிவு.
இன்று காலை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்யவதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றபோதே சபையின் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது.
இந்தச் சபையின் 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் தவிசாளர் பதவிக்காகப் போட்டியிட்ட அயினியாப்பிள்ளை முபாரக் வெற்றி பெற்றார்.
தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பின் மூலமாகவா அல்லது இரகசிய முறையிலா நடைபெற வேண்டும் என ஆணையாளர் கேட்டார். இத்தருணம் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது எனவும், எனவே இரகசிய வாக்கெடுப்பு வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் மனாப் றிஷான் கூறினார். இந்தக் கருத்தை அவரது கட்சியின் ஏனைய மூன்று உறுப்பினர்களும் கூறினர். அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பைக் கோரினர். ஆனால், சபையில் இருந்த ஏனைய 10 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை நடத்தும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்துப் பெரும்பான்மையானவர்களின் கருத்தைத் தாம் ஏற்பதாக ஆணையாளர் கூறி வாக்கெடுப்பை ஆரம்பித்தார். அவ்வேளை இரகசிய வாக்கெடுப்பைக் கோரிய 6 உறுப்பினர்களும், மேலும் ஒரு இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் வாக்கெடுப்பு இரகசிய முறையில் நடத்தப்படாதமையை ஆட்சேபித்து சபையில் இருந்து வெளியேறினர்.
இதற்கு முன்னர் தவிசாளருக்கான முன்மொழிவை முன்வைக்குமாறு சபையினரை ஆணையாளர் கோரிய போது அப்துல் மனாப் றிஷானின் பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி அ.முபாரக்வுடன் இவர் போட்டியிட இருந்தார்.
இந்தச் சபையில் 17 ஆசனங்கள் உள்ளன. இதன்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5, இலங்கைத் தமிழரசுக் கட்சி 4, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4, ஐக்கிய மக்கள் சக்தி 2, தேசிய மக்கள் சக்தி 1, சுயேச்சைக் குழு 1 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தனர்.
இந்த உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஓர் உறுப்பினரும், சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவரும் அ.முபாரக்ககுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு பற்றிய அறிவிப்பை ஆணையாளர் வெளியிட்ட போது சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைக்குமாறு சபையில் இருந்த 8 உறுப்பினர்களும் புதிய தவிசாளரைக் கேட்டனர். இதையடுத்து 15 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் சபை கூடிய போது உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் வகர்தீன் மொஹமட் றிஷாத்தின் பெயர் பிரேரிக்கப்பட்டது. வேறு பிரேரணைகள் இல்லாத நிலையில் அவர் உப தவிசாளராகத் தெரிவானார். அந்தத் தருணம் ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு உறுப்பின் இந்தத் தெரிவை ஆட்சேபித்து சபையை விட்டு வெளியேறினார்.
இந்தச் சபையில் தமது இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது என்று சில வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பன இணைந்து ஒப்பந்தம் செய்திருந்த போதும், அந்த ஒப்பந்தத்துக்கு மாற்றமாக இந்தச் சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு உப தவிசாளர் பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளது.





