காரைதீவு பிரதேச சபை மீண்டும் தமிழரசு வசம் – தவிசாளராக பாஸ்கரன் தெரிவு.
அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சுப்பிரமணியம் பாஸ்கரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி காரைதீவு பிரதேச சபையின் 4 ஆவது தேர்தலில் 5 ஆவது தவிசாளராக சு.பாஸ்கரன் 8 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.
உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர் எ.எச்.எம்.இஸ்மாயில் பகிரங்க வாக்களிப்பின் மூலம் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேச சபைக்காக நடைபெற்ற 4 ஆவது தேர்தலின் மூலம் தெரிவான 11 உறுப்பினர்களிடையே இந்தத் தெரிவு நடைபெற்றது.
தவிசாளர் தெரிவுக்காக இரகசிய வாக்கெடுப்பா? பகிரங்க வாக்கெடுப்பா? என்ற விவாதத்தில் சுமார் அரைமணி நேரம் சென்றது.
தவிசாளரின் பெயரை முன்மொழியுமாறு ஆணையாளர் அஸ்மி கேட்டுக்கொண்டார்.
அங்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சு.பாஸ்கரனின் பெயரை தமிழரசு உறுப்பினர் கே.ஜெயசிறில் முன்மொழிய மு.கா. உறுப்பினர் இஸ்மாயில் வழிமொழிந்தார்.
மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திருமதி கிருஷ்ணபிள்ளை செல்வராணியை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அபூபக்கர் பர்ஹாம் முன்மொழிய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுலஸ்தனா வழிமொழிந்தார்.
தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்கெடுப்பு மூலம் நடத்துவது எனச் சபையில் உள்ள 8 உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததற்கமைவாக பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின்போது பாஸ்கரன் 8 வாக்குகளைப் பெற்றுக்கொண்தாரா. செல்வராணி 2 வாக்குகளைப் பெற்றார். பர்ஹாம் நடுநிலை வகித்தார்.
அதன்படி காரைதீவு பிரதே சபையை 4 ஆவது தடவையாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்று தவிசாளர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டது.
அடுத்து உப தவிசாளர் தெரிவு புதிய தவிசாளரின் அனுமதியுடன் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
உப தவிசாளர் பதவிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயிலின் பெயர் முன்மொழியப்பட்டது. வேறு பெயர் முன்மொழியப்படாமையினால் இஸ்மாயீல் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.










