முசலி பிரதேச சபை ஆட்சி தேசிய மக்கள் சக்தி வசம்.

மன்னார் மாவட்டம், முசலி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

முசலி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவநந்தினி பாபு தலைமையில் முசலி பிரதேச சபையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கியாதியன் சாயூ நலீம் மற்றும் தொழிலாளர் கட்சி உறுப்பினர் முகமது காமில் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதையடுத்துச் சபையில் உள்ள 16 உறுப்பினர்களும் கலந்துகொண்டு பகிரங்க வாக்கெடுப்பைக் கோரினர்.

இதன்போது தொழிலாளர் கட்சி உறுப்பினர் முகமது காமில் 7 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கியாதியன் சாயு நலீம் 9 வாக்குகளையும் பெற்றனர்.

அதிகூடிய வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கியாதியன் சாயு நலீம் முசலி பிரதேச சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அவருக்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, சுயேச்சைக் குழு, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஆதரவை வழங்கியிருந்தன.

உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அப்துல் ரசீது தன்ஸீல் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.