சுயேச்சைச் குழுவின் ஆதரவுடன் நாவிதன்வெளி பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி! – தவிசாளராக ரூபசாந்தன் தெரிவு.
அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக் கூட்டம் இன்று காலை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எஎல்எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
அதன்போது தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இ.ரூபசாந்தனும், உப தவிசாளராக வண்டில் சின்ன சுயேச்சைக் குழுவின் தலைவர் கு.புவனரூபனும் தெரிவு செய்யப்பட்டார்கள் .
பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற தெரிவுக் கூட்டத்தில்
தவிசாளர் தெரிவுக்கு அழைத்தபோது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் இ.ரூபசாந்தனும், தேசிய மக்கள் சக்தி சார்பில் எஸ்.நிரோஷனும் போட்டியிட்டார்கள்.
ரூபசாந்தன் 8 வாக்குகளும், நிரோஷன் 5 வாக்குகளும் பெற்றனர். அதற்கமைய ரூபசாந்தன் தவிசாளரானார்.

உப தவிசாளர் தெரிவில் சுயேச்சை சார்பில் நளீரும், வண்டில் சின்னச் சுயேச்சைக் குழு சார்பில் புவனரூபனும் போட்டியிட்டனர் .
அங்கும் எட்டுக்கு ஐந்து என்ற அடிப்படையில் வண்டில் சின்ன சுயேச்சைக் குழுத் தலைவர் புவனரூபன் உப தவிசாளரானார்.
சபையில் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க அங்கு போட்டியிட்ட வண்டில் சின்ன சுயச்சைக் குழு இணக்கம் தெரிவித்திருந்தது.
