திருகோணமலையில் பாதிக்கப்பட்டோரின் குறைகளைக் கேட்டறிந்தார் வோல்கர் டர்க் – பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முயற்சிப்போம் என்றும் அவர் உறுதி.
திருகோணமலை மாவட்டத்துக்கு இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை வரவேற்று, கவனவீர்ப்பு நடவடிக்கையைத் திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள யுபிலி மண்டபத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பாதிப்புகளை பாதாகைகளில் படங்களின் மூலமாகவும் வாசகங்கள் மூலமும் காட்சிப்படுத்தியவாறு அமைதியான முறையில் கவனவீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனைக் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், வடக்கு – கிழக்கு சமூக இயக்கம், சிவில் அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அந்த இடத்துக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் வழங்கி அவருடன் உரையாடியிருந்தார்கள்.

இதன்பின்னர் கவனவீர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தாங்கியிருந்த பதாதைகளை அவர்களிடத்தில் சென்று ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் பார்வையிட்டதுடன் தனது அன்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை அரசுடன் இணைந்து உங்களது பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதற்கு நாம் முழுமையான முயற்சிகளை எடுப்போம் என்று இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
