இ.போ.சவுடன் முரண்பாடு: வடக்கில் செவ்வாயன்று சகல தனியார் பஸ்களும் சேவை முடக்கப் போராட்டம்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச. தரப்பினரிடையே குழப்ப நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர்,
“யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்று குறித்த சாலை முகாமையாளரின் உத்தரவுக்கமைய சட்டவிரோத சேவையை வவுனியா நோக்கி முன்னெடுக்க முயன்றது.
இதை அவதானித்த நாம் குறித்த சட்டவிரோதச் செயற்பாட்டை கண்டித்து அதை நிறுத்துமாறு வலியுறுத்தினோம். ஆனால், இ.போ.சவினர் அடாத்தாக சேவையை முன்னெடுக்க முயன்றனர்.
ஏற்கனவே இந்தச் சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினரிடமும், போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிடமும் முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்திருந்தோம். ஆனாலும், இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையே காணபடுகின்றது.
அத்துடன் இ.போ.சவினர் அடாத்தாக சட்டத்துக்கு முரணாக செயற்படுவதுடன் தனியார் போக்குவரத்துச் சேவையை முடக்கவும் முயன்று விபத்துக்கள் ஏற்படுவதற்கும், முரண்பாடுகளை உருவாகுவதற்கும் வலிந்து இழுக்கின்றனர்.

எனவே, இவ்வாறான இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பஸ்களின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மகாணம் தழுவிய ரீதியில் முழுமையான சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை நாம முன்னெடுக்கவுள்ளோம்.” – என்றார்.
