செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று சனிக்கிழமை மேலும் மூன்று மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் நாள் அகழ்வு இன்று நடைபெற்றது.

இன்று மேலும் மூன்று மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை அகழ்ந்து எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தமாக 27 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 22 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், மனிதப் புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காகச் சட்ட வைத்திய அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதன்பிரகாரம் மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து ஒரு குழு வருகை தந்து மண் மாதிரிகளைப் பெறவுள்ளது. அவர்களுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இரசாயனவியல் பீட பேராசிரியர்களும் இணைந்து செயற்படவுள்ளனர்.

செய்மதிப் படங்கள் மூலம் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சில இடங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.