ஐ.நா. ஆணையரின் வருகை புலிகளின் நிகழ்ச்சி நிரலே! – முன்னாள் அமைச்சர் விமல் விஷமத்தனம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை அரசைச் சிக்கவைக்கும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைப் பயணம் அமைந்துள்ளது என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கை தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக அமைந்துள்ளது. தம்மால் எடுக்கப்படும் பாரதூரமான முடிவுகள் சரியானவை என்று காண்பித்துக்கொள்வதே இதன் நோக்கம்.
அதாவது தாம் இலங்கைக்குச் சென்று, பல தரப்பினரைக் சந்தித்துக் கலந்துரையாடி, அதற்கமையவே அறிக்கை தயாரிக்கப்பட்டது எனக் கூறிக்கொள்வதே அவர்களின் எண்ணம். இதற்கு முன்னரும் இதுவே நடந்துள்ளது. நவநீதம்பிள்ளை, அல் ஹுசைன் ஆகியோரும் வந்தனர்.
அனைத்து தரப்பினரையும் சந்தித்தோம் என அவர்கள் கூறினாலும் பிரிவினைவாதிகளையும், அடிப்படைவாதிகளையுமே மட்டுமே சந்தித்தனர். அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்திலேயே அறிக்கையும் வெளிவந்தது.
தற்போதைய ஆணையாளரும் அதே வழியில்தான் வந்துள்ளார். யாழ்ப்பாணத்துக்குச் சென்று உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்துள்ளார். வடக்கில் உள்ளவர்கள் மட்டுமா இறந்தனர்? புலிகளால் மக்கள் கொல்லப்படவில்லையா? வடக்கில் படையினரின் உடல்கள் இல்லையா? கொல்லப்பட்ட பொலிஸாரின் உடல்கள் இல்லையா?
செம்மணியில் புலிக்கொடிகளுடன்தான் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. பாதுகாப்பு தரப்பில் இருந்த முன்னாள் அதிகாரிகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளரை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தனர். அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சில சட்டத்தரணிகள் குழுவும் கோரி இருந்தது. அந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. தேசியவாத அமைப்புகளுக்கும் இடமளிக்கப்படவில்லை. மாறாக புலிகளின் சித்தாந்தத்துடன் செயற்படும் நபர்களுடன் மட்டுமே சந்திப்பு நடந்துள்ளது.” – என்றார்.
