குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி – வாகரையில் சோகம்.

மட்டக்களப்பு, வாகரை – பனிச்சங்கேணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மூன்று சிறுவர்களும் உறவினர்களுடன் நேற்று மீன் பிடிக்கச் சென்ற வேளையிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பனிச்சங்கேணியைச் சேர்ந்த க.சானுஜன் (வயது 12), க.டிக்ஷன் (வயது 10), ஜெ.ருக்ஷானா (வயது 10) ஆகிய மூன்று சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் பணிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களாவர்.

உயிரழந்த மூவரும் குளத்தின் கரையோரத்தில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் காணப்பட்ட பாரிய குழியில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கோடை காலமானதால் குளத்தில் நீர் மட்டம் குறைந்து காணப்படுவது வழக்கமாகும். இந்தக் காலங்களில் குளத்தில் மீன்பிடித் தொழில் ஈடுபடுபவர்கள் சிலர் தங்களது குடும்ப சகிதம் அந்தப் பகுதிக்குச் சென்று தங்கி நின்று இரவு பகலாக மீன்பிடித் தொழில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும். இவ்வாறான நிலையிலேயே இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.