இலங்கை அரசின் படுகொலைகளை அந்த அரசே விசாரிப்பது ஏற்புடையதல்ல மாற்றான் தாய் மனநிலையுடன் தமிழர்களைக் கையாளாதீர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்குச் சிறீதரன் பதிலடி.
உள்ளக விவகாரத்தில் சர்வதேசத் தலையீடு தேவையில்லை எனக் கூறுவதன் ஊடாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீள வலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்கின்றார் எனவும் சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி., இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வாரம் சிங்களச் செய்திச் சேவை ஒன்றுக்கு அளித்திருந்த நேர்காணலில், நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத் தலையீடுகள் அவசியமற்றவை எனவும், அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புக்கள் ஊடாக பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் அண்மைய இலங்கை விஜயமும், அவரது அவதானிப்புக்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத் தொடரில் இலங்கைக்குச் சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இது குறித்து கருத்துரைத்த சிறீதரன் எம்.பி., இலங்கை இராணுவத்தினரைச் சர்வதேச அரங்கில் நிறுத்தமாட்டோம் எனவும், உள்ளக விவகாரத்தில் சர்வதேசத் தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு என்பதை மீள வலியுறுத்துவதுடன் தமிழர்களை மாற்றான் தாய் மனநிலையுடன் கையாள்கிறார் என விசனம் வெளியிட்டார்.
அதேவேளை நாட்டின் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், சர்வதேசத்தின் மத்தியில் நாட்டைக் காப்பாற்றுவதற்காகவும் விஜித ஹேரத் அவ்வாறு பேசுவதாகக் குறிப்பிட்ட சிறீதரன் எம்.பி., இருப்பினும் மீறல்களாலும் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழர்கள் அவரது கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கும் தற்போதைய அரசால் உள்ளகப் பொறிமுறை ஊடாக எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தர முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர்தான் தமது தேவை என்னவென்பதைக் கூற வேண்டும் எனக் குறிப்பிட்ட சிறீதரன் எம்.பி., இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகளை முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
