பிரதம நீதியரசர் பதவிக்கு பிரீதியின் பெயர் பரிந்துரை.

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பரிந்துரையை ஜனாதிபதி அரசமைப்புச் சபைக்கு வழங்கியுள்ளார்.

இந்தப் பரிந்துரையின் மீது இறுதி முடிவை எடுக்கும் வகையில் அரசமைப்புச் சபை நாளை புதன்கிழமை கூடவுள்ளது.

தற்போதைய பிரதம நீதியரசர் மூர்து பெர்னாண்டோ எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தவுள்ளார்.

நீண்ட கால நீதித்துறை சேவையில் அனுபவம் பெற்ற பிரீதி பத்மன் சூரசேன, உயர்நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இதேவேளை, நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட பல முக்கிய வழக்குகளில் நீதிபதியாகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற மூவரடங்கிய விசாரணைக் குழுவின் தலைவராகவும் அவர் அங்கம் வகிக்கின்றார்.

இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால் பிரீதி பத்மன் சூரசேன, இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார்.

Leave A Reply

Your email address will not be published.