இலங்கையை ஆட்டிப்படைக்கும் அரசியல் , கொவிட் வைரஸ்கள்: கருணாகரன்

அரசியல் வைரஸ், கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் ஆகிய இரண்டினுடைய தாக்கமும் இலங்கையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டுக்கும் விரைவில் சரியான பாதுகாப்பு உபாயங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் நாடு மிக மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏறக்குறைய இது இன்னொரு யுத்தச் சூழல்தான்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் கூடிக் கொண்டே போகிறது. இதைக் குறித்து அபாயச் சங்கொலியை ஊதிக் கொண்டிருக்கிறது மருத்துவர்கள் சங்கம். தொற்றாளர்களின் எண்ணிக்கை எல்லை மீறுமானால் அவர்களைப் பரிசோதனை செய்யவும் பராமரிக்கவும் முடியாத நிலை ஏற்படும். இது நாட்டுக்குப் பெரிய சுமையாக மாறுவது மட்டுமல்ல,  மக்களைக் காப்பாற்ற முடியாத சூழலையும் உருவாக்கி விடும். அப்படியென்றால் நாடு இன்னொரு மரணச் சூழலை எதிர்கொள்ள நேரிடும்.

ஆகவே இதைத் தடுப்பதற்கு ஒரு கூட்டுப் பொறிமுறை உருவாக்கப்படுவது அவசியம். அதுவும் மிக விரைவாக. தவறும் பட்சத்தில் “தாமதமாகும் ஒவ்வொரு கணமும்  தவணை முறையில் மரணம் நிகழும்” என்பதாகவே முடியும்.

இதைப்போலவே இலங்கையில் பரவிக் கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடியுமாகும். உள்நாட்டு அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய பெரும்பான்மை பலமும் திராணியும் அரசுக்கும் அரசுத் தலைமைக்கும் உண்டெனலாம். ஆனால், அது மட்டும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் போதாது. இன்றைய பூகோள யதார்த்தத்தின்படியும் அரசியல் ஒழுங்கின்படியும் ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது தொடர்புறுத்தப்பட்ட அரசியல் பொருளாதாரப் பொறிமுறையே தேவையானது. இதைச் சரியாக மேற்கொள்ளாத நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்குகின்றன. இதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட விலக்கல்ல. அப்படியிருக்கும்போது வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நமது நிலை எப்படியிருக்கும்?

India hopes Pompeo's visits to Sri Lanka, Maldives & Indonesia will reduce Chinese influence

எனவே இதைக் குறித்து எச்சரிக்கை செய்கிறார்கள் அரசியல் நோக்கர்களும் விமர்சகர்களும். இதற்கும் ஒரு கூட்டுப் பொறிமுறை அவசியம். ஏனெனில் இலங்கையைத் தொடர்ந்தும் தங்களுடைய இரண்டு கால்களுக்கிடையில் வைத்திருப்பதற்கே ஒவ்வொரு வல்லாதிக்கச் சக்தியும் முயற்சிக்கிறது. புவிசார் அரசியலில் இலங்கையின் அமைவிட முக்கியத்துவமே இதற்கு முதற்காரணம். இதனால்தான் இந்த ஆதிக்கப்போட்டியும்.

இலங்கை சீனாவின் பக்கமாகப் போய் விடக் கூடாது. அல்லது இலங்கையில் சீனா செல்வாக்கைச் செலுத்தி விடக் கூடாது என்பது அமெரிக்காவின் கவலை. இதையே இந்த வாரம் கொழும்புக்கு வந்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவும்  வெளிப்படுத்தியிருந்தார். ஜனாதிபதியுடன் நடந்த பேச்சின்பொழுதும் இதைப்பற்றிச் சுற்றி வளைத்துப் பேசி, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து நேரடியாகவே கேட்டுமிருக்கிறார் பொம்பியோ.

“அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படும் அளவுக்கு நிலைமை இல்லை. கடனுதவிகள், மீள்கட்டுமானப் பணிகளுக்கான உதவிகளைப் பெற்றாலும் சீனாவின் கடன்பொறிக்குள் நாம் சிக்கவில்லை. இலங்கை எப்பொழுதும் பக்கர்சார்பற்ற நாடாகவே இருக்க விரும்பும்” என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

ஆனாலும் இதையிட்டுப் பொம்பியோ திருப்பதியடைந்ததாகத் தெரியவில்லை.

இந்தக் கவலை இந்தியாவுக்கும் உண்டு. இது தம்முடைய பாதுகாப்பு நலன்கள், வியூகங்கள் சார்ந்தும் பொருளாதார நலன் சார்ந்ததுமாகும் என அமெரிக்காவும் இந்தியாவும் சிந்திக்கின்றன.

இப்படித்தான் சீனாவும் சிந்திக்கிறது. தன்னுடைய பொருளாதார விரிவாக்கத்துக்கும் அதற்கமைவான தொடர்பாடல் மற்றும் பாதுகாப்பு வியூகங்களுக்கும் இலங்கையை அது பயன்படுத்திக் கொள்ள விளைகிறது.

ஆகவே இந்த நலன்சார் போட்டியின் ஆட்டக்களமாகியிருக்கிறது இலங்கை. இந்த ஆடுபுலியாட்டம் இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. ஆனால், இப்பொழுது இது நேருக்கு நேர் போட்டியிடுகிற, மோதுகிற ஒரு களநிலையாக மாறியுள்ளது. இதன் விளைவுகளே பொம்பியோ சீனாவைச் சீண்டிப் பேசியதும் பொம்பியோ அளந்து பேச வேண்டும் எனச் சீனத் தூதரகம் பதிலளித்திருப்பதுமாகும்.

ஆகவே இந்த நிலையில் இந்த ஆதிக்கப் போட்டிக்குள்ளால் எப்படித் தப்பிப் பிழைப்பது, இந்த வல்லாதிக்கச் சக்திகளை எப்படிக் கையாள்வது, இந்தச் சூழலில் இவற்றின் மூலமாக எவ்வளவு பயன்களைப் பெற்றுக் கொள்வது என்றே நாம் சிந்திக்க வேண்டும். ஆனால், இதுவொன்றும் எளிய விசயமல்ல. மிக நுட்பமான இராஜதந்திர நடவடிக்கைகளே இதற்கு அவசியம்.

அதற்கு முதலில் நாட்டில் பிரிவு நிலை அல்லது முரண் நிலைகளை நாம் அகற்றிக் கொள்ள வேண்டும். அப்படிப் பிளவுண்ட சமூக நிலையும் அரசியல் நிலையும் இருந்தால் அந்த அகமுரண்பாட்டுக்குள்ளால் தமது கைகளையும் கால்களையும் இந்தச் சக்திகள் நுழைத்துக் கொள்ளும். அதாவது இதற்காக இவை எப்போதும்  வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் காணப்படும் அரசியல் முரண் நிலைமைகளையும் பொருளாதார நெருக்கடியையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே காரியத்தைச் சாதிக்க விளைகின்றன. இலங்கையிலும் இந்த அணுகுமுறையையே மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றன.

அப்படியான ஒரு நிலையே 2015 இலும் ஏற்பட்டது. 2015 க்குப் பிறகு இன்னொரு விதமான சூழல் நிலவியது. அதையும் இவை தமக்கிசைவாக்கிக் கொண்டன. அதற்கு முன் 2009 இல் இறுதிப் போரின்போதும் அதற்கு முன்னும் கூட வெளிச்சக்திகளின் தலையீடும் செல்வாக்கும் இலங்கையில் காணப்பட்டது. ஏன் இலங்கை – இந்திய உடன்படிக்கையே ஒரு வெளிச்சக்திகளுடைய தலையீடுகளின் வழியான விளைவுகளில் ஒன்றுதானே. ஆகவே, முன்னர் நடந்ததும் இதுதான். இப்பொழுது நடந்து கொண்டிருப்பதும் இதுதான். இனிமேல் நடக்கப்போவதும் இதுவே.

Donald Trump has reiterated that America is ready to mediate between India and China | இந்தியா சீனா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: Donald Trump | World News in Tamil

இப்பொழுது இலங்கையைச் சுற்றி வளைக்க முற்படும் வெளியாரின் முற்றுகையில் அமெரிக்கா + சீனா + இந்தியா ஆகியவை வெளிப்படையாகவே முன்னிலை வகிக்கின்றன.  ஏறக்குறைய கடுமையான போட்டி நிலையில் எனக் கண்டோம். இந்த அடிப்படையில்  கடந்த மாதம் சீன உயரணி ஒன்று ஜனாதிபதியைச் சந்தித்திருந்தது. கடந்த வாரம் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ ஜனாதிபதியையும் வெளிவிவாகார அமைச்சரையும் சந்தித்திருக்கிறார். இதற்கு அடுத்த சில தினங்களில் சீனா புதிய தூதுவராக சாங் சுவாங்கை இலங்கைக்கு நியமித்துள்ளது. அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்திருக்கிறார். இதற்கிடையில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனைச் சந்தித்திருக்கிறார்.

இவர்கள் ஒவ்வொருவருடைய சந்திப்புகளும் அரசியல் ரீதியிலும் ராஜதந்திர நோக்கிலும் முக்கியமானவை. கூடவே இவர்களுடைய திறன் பின்னணிகளும் வலுவானவை. மைக் பொம்பியோ அமெரிக்காவின் உளவு நிறுவனமான சீ. ஐ..ஏயின் முக்கிய பொறுப்பிலிருந்தவர். சாங் சுவாங், சீனாவின் முக்கிய ராஜதந்திரிகளில் ஒருவர். ஆகவே வலுவான ஆட்டக்கார்களையே ஒவ்வொரு தரப்பும் களமிறக்கியுள்ளன.

1987 இல் அன்றைய சூழலுக்கு அமைய இந்தியத் தூதர் டிக்ஸித் வகித்த பாத்திரத்தையும் உண்டாக்கிய நெருக்கடிகளையும் செலுத்திய செல்வாக்கினையும் எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இப்பொழுது நாடு கொரோனாவினால் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடி வேறு சுமையாக அழுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் யாரையும் எடுத்தெறிந்து பகைக்கவும் முடியாது. யாருடைய காலில் விழுந்து பணியவும் கூடாது. அதேவேளை எல்லோருக்கும் எப்போதும் சும்மா பல்லைக் காட்டிக் கொண்டிருக்கவும் முடியாது. ஏனென்றால் அரசியல் என்பதே நலன் சார்ந்தது என்பதால், ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அசைவிலும் தமக்கு என்ன லாபம் என்றே ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பர். ஆகவே அவர்களுடைய எதிர்பார்ப்புக்கும் நமது எதிர்பார்ப்புகளுக்குமிடையில் ஒரு உறவுப் பாலத்தை நிர்மாணிக்க வேண்டும்.

இதற்கு முதலில் செய்யப்பட வேண்டியது, ஆளை ஆள் பிரித்துக் கையாள முடியாத அளவுக்கு நம்மைக் கட்டிறுக்கமாக்கி வைத்திருப்பதாகும். அதற்கு நமக்கிடையே இருக்கின்ற இனரீதியான முரண்பாடுகளைக் களைவது அவசியமாகும். அதாவது அரசியல் தீர்வை எட்டி ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும்.  இதுவே  நாட்டை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலவீனமான நிலையிலிருந்து பலமான நிலைக்குக் கொண்டு செல்லும்.

ஏனென்றால், பொம்பியோ விடைபெற்றுச் செல்லும்போது என்ன சொல்லியிருக்கிறார் என்றால், “இந்த அரசாங்கம் கடந்த காலத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும்” என.

இது தமிழ்த்தரப்பைத் தமக்கிசைவாக்கிக் கொண்டு அதற்குள்ளால் காய்களை நகர்த்துவதற்கான உபாயமாகும். அதாவது அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்காகும். ஆனால், மெய்யாகவே தமிழ் மக்களுக்குச் சாதமானது அல்ல இது. அப்படியென்றால், அமெரிக்கா ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் தமிழர்களுக்குச் சார்ப்பாக நின்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம், இறுதிப்போரின்போது, அதற்குப்பிறகான மனித உரிமைகள் விடயங்களின் போது, அதற்குப் பிறகு நல்லாட்சியின்போது என.

சீனா – அமெரிக்கா மோதல் தொடர்பில் கோட்டா அரசை எச்சரிக்கிறார் சம்பந்தன்

ஆகவே இந்தப் பொறுப்புச் சொல்லுதலில் அமெரிக்காவும் பங்குண்டு. பொறுப்புச் செல்லுவதை அவர்களும் முதலில் செய்ய வேண்டும். இதை 2010 இலேயே சர்வதேச ஊடகமொன்றுக்கான நேர்காணலின்போது வலியுறுத்தியிருந்தேன். எல்லோரும் மற்றவரைப் பார்த்துக் கையை நீட்டுகிறார்களே தவிர, தம்முடைய இதயத்துக்கு நேரே விரல் நீட்டுவதற்குத் தயாராக இல்லை.

ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல், பொம்பியோவுக்கு கருணை மனுக்கொடுக்க முற்பட்டிருக்கின்றன சில தமிழ்த்தரப்புகள். மக்களுடைய கையறு நிலை அப்படியிருக்கலாம். ஆனால், இதனால் எதுவுமே நடக்கப்போவதில்லை என்று நாம் புரிந்து கொள்வது அவசியம். கடந்த காலத்தில் பிரித்தானியப் பிரதமர் உள்ளிட்ட பல மேற்குலக மேதாவிகளுக்கு ஆயிரம் விண்ணப்பங்களைக் கொடுத்தபோதும் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது? இப்படி எல்லோருடைய கால்களைப் பிடித்து இறைஞ்சுவதும் ஒன்றுதான். உங்களுக்கு தரவேண்டியதை தர மறுத்து விட்டு வெளிச்சக்திகளின் கால்களுக்கிடையில் தடுமாறுவதும் ஒன்றுதான்.

எனவே இன்றைய சூழலில் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் நமக்கிடையில் இருக்கும் பிணக்குகளை நீக்கிக் கொள்ள வேணடும். அதனால் மூலமே நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் அரணை முதலில் உருவாக்கிக் கொள்ளலாம். அதிலிருந்தே பிறகு ஏனையவற்றைச் செய்ய முடியும்.

சிங்கப்பூரைப்போல இலங்கை வரவேண்டும் என்று சொல்வதை விடவும் சிங்கப்பூராக வேண்டும், அரசியலிலும் பொருளாதாரத்திலும். முதல் தடையைத் தாண்டுவதற்கு இதுவொரு நிபந்தனை.

Leave A Reply

Your email address will not be published.