மனிதப் புதைகுழிகள் நிறைந்த நாடாகவே உள்ளது இலங்கை! – கறுப்பு ஜூலை படுகொலைக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று சிறீதரன் சுட்டிக்காட்டு.

“இந்த நாட்டில் எங்கு தோண்டினாலும் எலும்புக்கூடுகள்தான் வருகின்றன. மனிதப் படுகொலைகள் நடைபெற்ற – மனிதப் புதைகுழிகள் நிறைந்த நாடாகவே இலங்கை உள்ளது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“இன்றைய நாள் இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள். இந்த நாட்டில் ஜூலை இனப்படுகொலை நடந்து 42 வருடங்களாகிவிட்டன. ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் லலித், காமினி திஸாநாயக்க போன்றவர்களின் வழிகாட்டலில் தமிழர்கள் மீது மிக மோசமான இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. வெலிக்கடைச் சிறையில் இருந்த குட்டிமணி, தங்கத்துரை,ஜெகன் உட்படப் பலர் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். பிறக்கப் போகின்ற தமிழீழத்தைப் பார்க்கவா போகின்றீர்கள் எனக் கேட்டு அவர்களின் கண்கள் பிடுங்கி எறியப்பட்டன.

“ஜூலை 23″ தமிழர்களின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். 42 வருடங்கள் கடந்தும் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல், நீதி இல்லாமல், விசாரணைகள் இல்லாமல் இருக்கின்ற இந்த நேரத்தில் அதனை நான் பதிவு செய்கின்றேன். இந்த நாட்டில் எந்த அரசு வந்தாலும் இதற்கு ஒரு மன்னிப்புக் கோரலையோ – நீதியான விசாரணைகளையோ – பரிகாரத்தையோ தேட முற்படவில்லை.

1984.03.11ஆம் திகதி இந்தியாவில் இருந்து வெளிவந்த ”சண்டே” என்ற ஆங்கில சஞ்சிகை ஆசிரியர் அனிதா பிரதாப்புக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் 30 வயது நிரம்பிய தலைவரான பிரபாகரன் ”ஜே.ஆர். ஒரு உண்மையான பௌத்தராக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்க நேர்ந்திருக்காது” என்று கூறினார்.

எமது மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நாம் தொடர்ந்தும் நீதி கேட்டு போராடுகின்ற இனம். இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கின்ற அநுரகுமார ஒரு மண்குடிசையில் இருந்து இந்த நாட்டின் ஜனாதிபதியாக மாளிகை வரை வந்தவர். அம்மா சுட்டுக்கொடுத்த பலகாரங்களை ரயில்களில் விற்று சாதாரண பிரஜையாக வாழ்ந்து ஜனாதிபதியாகியுள்ளார். அடையாளம் உள்ள ஒரு தேசிய இனம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை உளப்பூர்வமாக உணரக்கூடிய ஒரு தலைவராக அநுரகுமார இருப்பார் என்றே நான் கருதுகின்றேன்.

நீங்களும் வியர்வையும் இரத்தமும் சிந்தி 56 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிபீடம் ஏறியுள்ளீர்கள். வரலாறு யாரையும் காத்திருக்க வைப்பதில்லை. அதேபோல் தமிழர்கள் சிந்திய இரத்தத்துக்கும் கண்ணீருக்கும் வரலாறு நிச்சயம் ஒரு வாய்ப்பைக் கொடுக்கும். அந்த வாய்ப்பை புரட்சியாளரான அநுரகுமார எவ்வாறு கையாளப் போகின்றார் என்ற விடயத்தைத்தான் நாம் பார்க்கின்றோம்.

இந்த நாட்டில் எங்கு தோண்டினாலும் எலும்புக்கூடுகள்தான் வருகின்றன. மனிதப் படுகொலைகள் நடைபெற்ற – மனிதப் புதைகுழிகள் நிறைந்த நாடாகவே இலங்கை உள்ளது. செம்மணியில் செவ்வாய்க்கிழமை வரை 80 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை இதற்கான நீதி விசாரணைக்கான கதவு திறக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

குறிப்பாக யாழ். மண்ணில் 2003ஆம் ஆண்டுக்கு மேற்பட்ட காலத்தில் அப்போதிருந்த கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில் ஒரு குழு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினுடைய ஆதரவோடு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை கவனத்தில் எடுக்கப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அறிக்கையின் விவரம் கூட வெளிவரவில்லை. 2003.10. 28ஆம் திகதி இந்த நாட்டின் தலைவர்களிடம் கொடுத்திருந்தார்கள். ஆனால், எந்தத் தீர்வும் யாருக்கும் கிடைக்கவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாட்டில் ஒரு தீர்வு பற்றி யோசிப்பதற்காக யாருமே சிந்திக்கவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தம் வந்தபோது ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் சூழ்ச்சியால் அந்த ஒப்பந்தம் ஒரு நீதியான தீர்வு கொண்டு வருவதற்கான பாதையை திறக்கவில்லை.

அதேபோல் 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். யுத்தத்தை முடித்துவைத்த மன்னனாகவே அவர் பார்க்கப்பட்டார். ஆனால், அவருக்குக் கிடைத்த இலங்கையில் யாருக்குமே கிடைக்காத அந்த அருமையான வாய்ப்பை அவர் தன்னுடைய இயலாமை, இனவாதம் காரணமாகத் தவறவிட்டார். அதனை இல்லாமல் செய்தார். அதனால் இன்று அவரும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றார்.

இந்த நாட்டின் தலைவர்களுக்கு அரிய வாய்ப்புக்கள் கிடைப்பதுண்டு. இன்றும் கூட ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 159 எம்.பி.க்களை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். குறிப்பாக 2005ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதிக்கு முதல் சுனாமி கட்டமைப்பில் இருந்து விலக வேண்டும் என்று அப்போதைய தலைவர் சோமவன்ச தலைமையிலான ஜே.வி.பி. ஜனாதிபதி சந்திரிக்காவை வலியுறுத்தியது.

அந்தக் கட்டாயப்படுத்தலுக்கு சந்திரிகா பணியாததால் 16ஆம் திகதி சந்திரிகா அரசில் இருந்து ஜே.வி.பி. வெளியேறியது. 39 எம்.பிக்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி. 5 காரணங்களை முன்னிறுத்தி அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சுனாமி பொதுக்கட்டமைப்பை உடைத்தெறிந்தது.

இங்குள்ள ஜே.வி.பி. தோழர்கள் ஒரு போராளிகள். வரலாறு உங்களை 50 வருடங்களுக்குப் பின்னர் ஆட்சிக்குக் கொண்டுவந்துள்ளது. இதேபோன்று தமது மண்ணில் போராடியவர்கள் மாவீரர்களாகத் துயிலும் இல்லங்களில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்தத் துயிலும் இல்லங்களுக்கு மேலால் இராணுவம் முகாம்களை அமைத்து தமது சப்பாத்துக் கால்களுடன் நடந்து திரிகின்றது. உதைபந்தாட்டம் விளையாடுகின்றது. இவ்வாறான நிலையில் எப்படி சகோதரத்துவம் வரும்? உங்களுக்கும் எங்களுக்குமான உறவு எப்படி நீடிக்கும்? நீங்களும் நாங்களும் இந்த நாட்டுப் பிரஜைகளாக எவ்வாறு ஒன்றாக கைகோர்க்க முடியும்? தயவு செய்து சிந்தியுங்கள்.

நாங்கள் எதற்கும் புறம்பானவர்கள் அல்ல. யாரையும் தள்ளி வைத்து பார்க்கவில்லை. ஒற்றுமையை விரும்புகின்றோம். ஆனால் நாங்கள் நாங்களாக, தமிழர்கள் ஒரு தேசிய இனமாக, எங்களுக்கே உரித்தான இறையாண்மையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கிலுள்ள எமது பூர்வீக மண்ணில் வாழ்கின்ற உரிமையோடு இருப்பதற்கான உத்தரவாதத்தையே நாம் கேட்கின்றோம். இந்த உத்தரவாதம் கிடைக்காத வரைக்கும் இந்த நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, ஒற்றுமை எவ்வாறு கிடைக்கும்?

வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களின் அபிவிருத்திக்கான பிரதேசம். ஆனால், அபிவிருத்தி செய்ய நீங்கள் பின்னடிக்கின்றீர்கள். தமிழர்கள் அபிவிருத்தியில் முன்னுக்கு வந்துவிடுவார்கள் எனப் பயப்படுகின்றீர்களா?

42 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் வர்த்தகத்துறையில் தமிழர்கள் செலுத்திய ஆதிக்கத்தை அழிக்கவே ஜே.ஆர்.ஜெயவர்த்தன கறுப்பு ஜூலை கலவரத்தைத் திட்டமிட்டு ஏற்படுத்தினார். தமிழர்களின் பொருளாதாரத்தை அவர் அழித்தார்.

நாம் மீண்டும் கேட்கின்றோம் இந்த நாட்டுக்குள் நாங்கள் நாங்களாக வாழ ஏன் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய முடியாது? தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் ஏன் பாலம் அமைக்க முடியாது? இந்த நாட்டில் உள்ளவர்களிடம் நல்ல எண்ணங்களைக் காண முடியாதுள்ளது.

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்று 304 நாட்களாகிவிட்டன. அரசியல் ரீதியாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதனை இன்னும் முன்வைப்பதற்கான தயார் நிலை, அது பற்றி பேசுவதற்கான வாய்ப்பு இந்த அரசிடம் கொண்டுவரப்படவில்லை. வடக்கில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்கள் இன்னும் உறவினர் வீடுகளிலும் அகதி முகாம்களிலும் உள்ளனர். ஆனால், இங்கிருந்து சிலர் சகோதரத்துவ ரயிலில் அங்கு போகின்றார்கள். ஒரு சிங்கள தேசிய இனத்துக்குரிய அடையாளங்களை நாம் ஏற்றுக்கொள்வது போல் தமிழனத்திற்கான அடையாளங்களை நீங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.