தமிழ் மக்களுக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு.

“காணிகள் விடுவிப்பு, காணாமல்போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரைப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு எமது அரசால் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும். இது உறுதி.”

இவ்வாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று வெள்ளிக்கிழமை சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“அரசு தமிழ் மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது உறுதி. அந்தவகையில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். காணாமல்போனவர்களுக்கு நீதி வழங்கப்பட்டு. தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களுக்குள் தீர்வு காணப்படும். அரசியல் கைதிகள் விடுதலை போன்றவை தொடர்பிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது. தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கும்போதும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்றைய பிரச்சினையல்ல. அது காலங்காலமாக புரையோடிப் போயுள்ள பிரச்சினையாகும்.

அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது ஒரு சிலர் கூறுவது போல் இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. தமிழ் மக்களின் நிலங்கள், உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பில் பாகுபாடுகள் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் மக்களின் இருப்புக் கேள்விக்குறியாகியுள்ளது.

1981 ஆம் ஆண்டு நாட்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்று 16, 18 இலட்சம் மக்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள்.

தற்போது அங்கு 6 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதே வேதனைக்குரிய விடயம். அன்று 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள். இப்போது 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள். அடுத்து அதுவும் குறைவடையலாம். அந்தவகையில் அரசியல் ரீதியான இருப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

அந்த மக்களின் வெளியேற்றமே இந்தக் கேள்விக்குறிக்கான காரணம். கடந்த யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். அதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் மூலமே பல்லாயிரக்கணக்கான மக்கள் இழக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போதும் மாணவர்கள், புத்திஜீவிகள் அங்கிருந்து வெளியேறும் மனநிலை அதிகரித்திருக்கின்றது.

ஒரு காலத்தில் கல்வி ரீதியில் பெரும் முன்னேற்றமடைந்த மாவட்டமாக வடக்கு விளங்கியது. எனினும், கடந்த 10 வருடங்களைப் பார்க்கும் போது கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையே காணப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் அதன் வடுக்கள் ஆற்றப்படவில்லை. அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு பிரேரணையைச் சிறீதரன் எம்.பி. சபையில் முன்வைத்துள்ளார்.

இவ்வாறு மக்கள் வெளியேறுவார்களானால் இன்னும் சில காலங்களில் மக்கள் இல்லாத யாழ்ப்பாணமே இருக்கும். இந்த நிலைமையில் இருந்து அந்த மக்களைப் பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் சிந்திக்கின்றோம். அதற்காகவே அரசு வடக்குக்கான துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

அந்தவகையில் பல திட்டங்கள் வடக்கில் தற்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று தொழில்பேட்டைகளை அங்கு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் பகுதிகளில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையம் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கை தரும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களையே எமது அரசு முன்னெடுத்துள்ளது.

இழக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழவேண்டும். அதன் பின்னரே சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதா அல்லது தனிநாட்டுக்காகப் போராடுவதா என்பதைத் தீர்மானிக்க முடியும். அவர்கள் இலங்கையில் வாழுகின்ற மனநிலையை உருவாக்குவது அவசியமாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.