கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது! அதை விட்டுக்கொடுக்கவே முடியாது!! – விஜய் வெளியிட்ட கருத்துக்கு அமைச்சர் விஜித ஹேரத் பதிலடி.

“கச்சதீவை மீளப் பெறுவது குறித்து இந்தியாவின் மத்திய அரசிடமிருந்தோ அல்லது இராஜதந்திர வழிகளிலோ எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அது இலங்கைக்குச் சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே, விஜய் வெளியிட்ட கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தென்னிந்தியத் திரைப்பட நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் கச்சதீவு குறித்து கருத்துத் தெரிவித்ததை அடுத்து, இந்த விடயம் பரவலான பேசுபொருளாக மாறியிருந்தது. இந்நிலையிலேயே நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,

“இத்தகைய கருத்துக்கள் வெறும் அரசியலுக்காக வழங்கப்படும் வாக்குறுதிகளாகும். அவற்றுக்கு உத்தியோகபூர்வமான எந்த முக்கியத்துவமும் இல்லை.

கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது. இது இலங்கையிலுள்ள ஒரு தீவாகும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. தற்போது தென்னிந்தியாவில் தேர்தல் காலமாகும். எனவே, வேட்பாளர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் தேர்தல் மேடைகளில் இதே போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த அறிக்கைகள் எதுவும் எந்த மாற்றத்துக்கும் இட்டுச் செல்லவில்லை.

விஜய் தனது கருத்தை ஒரு பிரசாரக் கூட்டத்தின் போது வெளியிட்டார். அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மத்திய அரசிடமிருந்தோ அல்லது இராஜதந்திர வழிகளிலோ எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை.

நேற்று, இன்று மற்றும் நாளை கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும்.” – என்றார்.

‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை’ என்று வினவியபோது, “அந்த ஒப்பந்தங்கள் தற்போது நீதித்துறை மதிப்பாய்வில் உள்ளன.” – என்று குறிப்பிட்டார்.

“அந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக ஒரு நீதிமன்ற வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. எனவே, சட்ட செயல்முறை முடிவடையும் வரை காத்திருப்போம்.” – என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.