குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகம் இன்று திறப்பு.
யாழ். குடாநாட்டு மக்களின் மக்களின் நீண்டகால குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் வகையில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திறந்து வைத்தார்.
தற்போதைய அரசின் முன்னுரிமைத் திட்டமாக டிஜிட்டல் மயமாக்கல் செயற்படுத்தப்பட்டுள்ளது எனவும், அடுத்த ஆண்டுக்குள் பொதுமக்கள் அரசுடனான அனைத்து பணக்கொடுக்கல் வாங்கல்களையும் இணையவழியில் மேற்கொள்ளும் வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் இந்நிகழ்வில் உரையாற்றும்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
இவ்வளவு காலமும் கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் தொலைதூர கிராமங்களுக்குப் பரவலாக்கப்பட்டு, அரசு செய்ய வேண்டிய பணிகளை, நெருக்கமாக முன்னெடுப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி உரையாற்றும்போது மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகக் கட்டடத்தின் 60ஆம் ஆண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட தபால் முத்திரை யாழ். மாவட்ட அரச அதிபரால் ஜனாதிபதிக்கு இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர்களான உபாலி சமரசிங்க, சுனில் வட்டகல, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
………………………
