கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கேரளத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆக. 4 ஆம் தேதி 3 மாத குழந்தைக்கு இந்த அமீபா பாதிப்பு இருப்பது முதலில் கண்டறியப்பட்ட நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்ததாக இன்று(திங்கள்கிழமை) மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது ராம்லா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் கோழிக்கோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி உயிரிழந்தார். ஆகஸ்டில் இந்த அரிய வகை அமீபா தொற்றால் 3 பேர் இறந்துள்ளனர்.

எப்படி பரவுகிறது?

சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம்.

சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம்.

நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.

சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.

இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் இருப்பதில்லை. அசுத்தமான நீரை குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.

Leave A Reply

Your email address will not be published.