பொறுப்புக்கூறல், நீதி வழங்கல் கடமையில் இருந்து இலங்கை ஒருபோதும் விலகவே முடியாது! – ஜெனிவாவில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இடித்துரைப்பு .
“நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையே, எதிர்கால குணப்படுத்தல் – நல்லிணக்கம் – நிலையான அமைதியை வளர்ப்பதற்கு அவசியமானவை.”
இவ்வாறு ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.
“பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளில் இருந்து மீள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளது. இதனைத் தவறவிடக்கூடாது.” – என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது. இதில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை தொடர்பாக அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே மேற்படி விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அண்மையில் நான் இலங்கைக்குச் சென்றபோது, நாட்டின் மிக நீண்டகால பிரச்சினைகளுக்கு, புதிய திசை நோக்கிய பயணத்துக்கு, அந்த நாட்டின் தலைமை உறுதியளித்தது. இந்த நிலையில், புதிய அணுகுமுறை, ஒத்திசைவானதும் காலக்கெடுவை வழங்கக்கூடியதாகவும் அமைய வேண்டும்.
பொறுப்புக்கூறல், நீதியை வழங்குதல், நீண்ட காலமாக இலங்கை மக்கள் அனுபவித்துவரும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் மற்றும் பிரிவினையை நீக்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசு, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையே,எதிர்கால குணப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை வளர்ப்பதற்கு அவசியமானவை.
இலங்கை பயணத்தின்போது, மனித உரிமைகள் மீறல், துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான துன்பங்களை நான் நேரடியாக கண்டேன்.
செம்மணி மனிதப் புதைகுழியில், தனது அன்பானவரின் இழப்பைத் தாங்கிக்கொள்ளாத துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தை நான் சந்தித்தேன்.
தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் தனது கணவரைத் தேடி வருகின்றார் என்றும் என்னிடம் கூறினார்.
தண்டனையில் இருந்து விலக்கு என்பது, இரண்டாவது வன்முறை வடிவமாகும். இது தீங்கு சுழற்சிகளை நிலைநிறுத்துகின்றது. இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனிக்கப்பட வேண்டும். அவர்களின் குரல்கள் பொறுப்புக்கூறல், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு குறித்த அரசின் கொள்கைகளை வழிநடத்த வேண்டும்.
உள்நாட்டுப் போரின்போது மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை முறையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் அதன் படைகள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்கள் செய்த உரிமைகள் மீறல், குற்றங்களின் நீடித்த தாக்கத்தை அங்கீகரிக்க வேண்டும்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்ற அரசு சாராத ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பிலும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதுவே, பொதுவான நீதி வழங்கப்படுகின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இலங்கை அரசு விரிவான அரசமைப்பு, சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசர தேவை உள்ளது. கடந்த கால துயரங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியமானது.
சுயாதீன அங்கத்தவர்களைக் கொண்ட, சுயாதீன பொது வழக்கு தொடுநர் பணிமனை ஒன்றை அமைப்பதற்கான இலங்கை அரசின் முயற்சியை வரவேற்கின்றோம்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குடியரிமை தொடர்பான நாடாளுமன்ற சீர்திருத்தத்தை நாம் தீவிரமாக ஊக்குவிக்கின்றோம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான அரசின் உறுதிப்பாடு இருந்த போதிலும், இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு உடனடி தடை விதிக்க வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், பொறுப்புக்கூறல் தொடர்பிலும், காணி விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பிலும் பணியாற்றுபவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
இதேவேளை, வடக்கு, கிழக்கின் இராணுவ மயமாக்கல், காணிகளை திருப்பியளித்தல் மற்றும் அனைத்து மட்ட ஆட்சிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விரிவான பாதுகாப்புத்துறை சீர்திருத்தத்துக்கான அவசர தேவை உள்ளது.” – என்றார்.
