கொரோனாவை எதிர்த்து வாழுங்கள்; நாட்டை முடக்கி வைக்கவே முடியாது! – ஜனாதிபதி கோட்டா

கொரோனாவை எதிர்த்து வாழுங்கள்;
நாட்டை முடக்கி வைக்கவே முடியாது!

– ஜனாதிபதி கோட்டா திட்டவட்டம் 

“கொரோனா வைரஸை ஒழிப்பதற்குத் தீர்வைக் கண்டறியும் வரை நாட்டை முடக்கி வைக்க முடியாது. சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அனைவரும் நாளாந்தச் செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுக்கத் தயாராக வேண்டும்.”

– ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு விசேட செயலணிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் இருந்த போதிலும் அவர்களுக்குத் தொற்று ஏற்படாமைக்குக் காரணம் அவர்கள் உரிய சுகாதார வழிமுறைகளைப் கடைப்பிடிப்பதேயாகும்.

அவர்களைப் போல் சுகாதார வழிமுறைகளை ஏனையோரும் கைக்கொண்டால் நாட்டை சிறப்பான முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். முக்கியமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை உரியவாறு கடைப்பிடித்தால் நாட்டை முடக்க அவசியமில்லை.

நாட்டை முடக்கி வைத்திருந்தால் அன்றாடம் உழைத்து வருமானம் பெறுபவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆகவே, குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மாத்திரம் கவனத்தில் கொண்டு நாட்டை முடக்கி வைத்திருப்பது தொடர்பில் தீர்மானிக்க முடியாது. அனைத்துப் பிரிவினர் தொடர்பிலும் கவனம் செலுத்தி இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும்” – என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும், கொரோனா ஒழிப்பு விசேட செயலணியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.