கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க 1 கி.மீ. தூரம் ஆட்டோவில் இருந்து தொங்கிய இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், ஜலந்தர் பைபாஸ் நெடுஞ்சாலையில் இளம்பெண்ணிடம் ஆட்டோவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பில்லாரில் இருந்து நவன்ஷாஹருக்கு செல்லும் பேருந்தைப் பிடிப்பதற்காக மீனா குமார் என்ற இளம்பெண் ஜலந்தர் பைபாஸில் ஆட்டோரிக்ஷா ஒன்றில் ஏறியுள்ளார். ஏற்கனவே அந்த ஆட்டோவில் ஓட்டுநர் அல்லாமல் இரண்டு ஆண்களும் இருந்துள்ளனர்.

ஆட்டோவில் இருந்து வெளியே தொங்கிய இளம் பெண்
ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே ஓட்டுநர் உட்பட மூவரும் கொள்ளையர்கள் என்பதை மீனா குமார் உணர்ந்திருக்கிறார். அதே சமயம், தான் இறங்க வேண்டிய இடத்தை ஆட்டோ நெருங்கிவிட்டதால் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென ஆட்டோவில் இருந்த கொள்ளையர்கள் இருவரும், மீனாவைத் தாக்கி அவரது கையை ஷாலால் கட்டி, கத்தியைக் காட்டி நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து துணிச்சலாக செயல்பட்ட மீனா குமார் கத்திக் கூச்சலிட்டதுடன் ஆட்டோவில் இருந்து வெளியே தொங்கியபடி மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

பேசுபொருளான சம்பவம்
இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியிருக்கின்றனர். ஆனால், கொள்ளையர்கள் வண்டியை நிறுத்தாமல் செல்ல, மீனா குமாரும் தொங்கியபடி 1 கிமீ தூரம் ஆட்டோவிலேயே பயணித்தார்.

மற்ற வாகன ஓட்டிகள் ஆட்டோரிக்ஷாவை வழிமறித்து மீனா குமாரை மீட்டனர். மூன்று கொள்ளையர்களில் ஒருவர் தப்பியோட, மீதமுள்ள இரண்டு பேரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தப்பியோடிய மூன்றாவது நபரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.