நீங்கள் செய்த ஊழல்களை அம்பலப்படுத்தினால் அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்வீர்களா? – சந்திரசேகருக்கு அர்ச்சுனா சவால்.
“மீன்பிடித்துறை அமைச்சராக இ.சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? நீங்கள் செய்த ஊழல்களை நான் வெளிப்படுத்தினால் அமைச்சுப் பதவியைத் துறப்பீர்களா?” – என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடற்றொழில் அமைச்சின் கீழ் பல ஊழல் குற்றச்சாட்டுகள் பொதுமக்களால் முன்வைக்கப்படுகின்ற போதும் அமைச்சர் சந்திரசேகர் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
நீரியல் வளங்கள் துறை அமைச்சராக சந்திரசேகர் பொறுப்பேற்ற பின் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் குறித்து கரிசனை கொள்ளவில்லை என்பது மக்களது முறைப்பாடாகும்.
இதுவரை குறித்த அமைச்சின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை என்பதை தெளிவுபடுத்த முடியுமா?, கடல் அட்டை பண்ணை விவகாரத்திலும் பல ஊழல்கள் இடம்பெற்றுள்ளன என்று மக்கள் முறையிடுகின்றனர். இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தங்களின் பினாமிகளின் பெயரில் கையூட்டல் இடம்பெறுகின்றது. இதற்கான ஆதாரங்களை சபையில் சமர்ப்பித்தால் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமா?
குறிப்பாக, அமைச்சர் சந்திரசேகர் அமைச்சுப் பதவியை ஏற்ற பின்னர் வடக்கு மாகாண கடற்றொழில் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்த முடியுமா?
அமைச்சர் சந்திரசேகர் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலகத் தயாரா?” – என்று அர்ச்சுனா எம்.பி. கேட்டார்
இந்நிலையில் அர்ச்சுனா எம்.பியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிப்பதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் நாடாளுமன்றில் பதில் அளித்தார்.
……………….
