கனகசபையின் மறைவு தமிழருக்குப் பேரிழப்பு! – இரங்கல் செய்தியில் தமிழரசின் எம்.பி. சிறீதரன் தெரிவிப்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய நேர்மையான மனிதர் மறைந்த தன்மன்பிள்ளை கனகசபையின் இழப்பு எமக்கு மிகுந்த கவலையைத் தந்துள்ளது. அவரின் மறைவு தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அவர் காலத்தில் நான் நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும் அவருடைய செயற்பாடுகள் அமைதியான நடத்தை தொடர்பாக நான் அறிந்துள்ளேன்.

கடந்த 2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். அதில் கூடிய விருப்பு வாக்குகளை அவர் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக கனகசபை ஐயா தெரிவானார். அவருடன் அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஸ்வரி ஆகிய நால்வரும், தேசியபி பட்டியல் மூலம் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கமுமாக வரலாற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முதல் தடவையாக மட்டக்களப்பில் ஐவர் நாடாளுமன்றம் சென்ற வரலாறு அதுவாகும்.
அந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளுடைய தலைமையே வேட்பாளர்களைத் தெரிவு செய்தனர். அதில் ஒரு நிர்வாக அதிகாரியாக இருந்த கனகசபை அண்ணரும் தெரிவானார்.
அந்தக் காலத்தில்தான் கருணா விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த காலமாகும். கருணா, பிள்ளையான் அச்சுறுத்தல் அதிகரித்த காலம் அந்தக் காலம்தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்குவைத்து கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அதனால் மாமனிதர்களான ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள் எம்.பி. சந்திரநேரு ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொந்த ஊருக்கோ, மாவட்டங்களுக்கோ செல்லாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருத்தனர். மட்டக்களப்பில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டம் செல்லாமல் மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி இருந்தனர்.
அப்போது 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு – செலவுத் திட்டத்துக்கு மஹிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என கனகசபை ஐயாவுடைய மருமகன், அரியம் அண்ணரின் சகோதரர், ஜெயானந்தமூர்தியின் மருமகன், தங்கேஸ்வரி அக்காவின் செயலாளர் ஆரையம்பதி அன்புமணி ஐயா ஆகிய நால்வரையும் கடத்தியபோது கனகசபை ஐயா மிகவும் அச்சத்தால் சோர்ந்து அரசியலே வேண்டாம் என முடிவெடுத்தார்.
அந்தப் பயம் காரணமாக 2010 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளராக அவர் சம்மதிக்கவில்லை. அதற்குப் பின்னர் அவர் எந்தத் தேர்தல்களிலும் ஈடுபடவில்லை. அன்று அவருக்கு ஏற்பட்ட மனக்கவலை தொடர்ந்தும் பல ஆண்டுகள் நீடித்து இருந்ததை நான் அவருடன் ஒருதடவை கதைக்கும்போது மனம் விட்டுக் கூறினார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்னம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளராகவும் சேவையாற்றி மக்களுடன் நேர்மையாகச் சிறந்த பணிகளை செய்த ஒருவர் இன்று 86 ஆவது அகவையில் இறையடி சேர்ந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றுத் தவிக்கும் உற்றார் உறவினர் ஊர்மக்கள் அனைவருடனும் எனது துயரைப் பகிர்ந்து கொள்கின்றேன்.” – என்றார்.
