இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த குடும்பத்துக்கு எதிராக முறைப்பாடு!

முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார நேற்று திங்கட்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இந்த முறைப்பாட்டை அளித்தார்.

அதன் பின்னர் அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விவரங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. குறித்த வெளிப்படுத்தல்கள் தொடர்பின் உள்ளடங்கள் குறித்து அரசின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகஷ சமர்ப்பித்துள்ள சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விவரங்கள் சந்தேகத்துக்குரியதாகக் காணப்படுகின்றன. தான் சட்டத்தரணியாகப் பணிபுரிந்து சொத்துக்களைச் சேகரித்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விவரங்களைக் காட்டிலும் அவரிடம் அதிகளவான சொத்துக்கள் இருக்கும் என்ற சந்தேகம் காணப்படுகின்றது.

அவரது உறவினர்கள் அல்லது நண்பர்களின் பெயர்களிலும் அவரது சொத்துக்கள் இருக்கலாம். ஆகவே, இந்த விடயம் குறித்து ஆணைக்குழு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாடு அளித்துள்ளோம்.

இரண்டாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளோம்.இவர் வசித்த கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தைப் புனரமைப்பதற்கு 51 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புனரமைப்புப் பணிகள் முறையான விலை மனு கோரலுடன் மேற்கொள்ளப்பட்டதா அல்லது புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் 51 கோடி ரூபா பதுக்கப்பட்டதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகின்றது. ஆகவே, இந்த முறைப்பாடு குறித்தும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இல. 260 டொரிங்டன் மாவத்தை, கொழும்பு 07 இல் 360 இலட்சம் ரூபாவுக்கு வீடொன்றைக் கொள்வனவு செய்துள்ளார். இந்த வீட்டைக் கொள்வனவு செய்வதற்காக அவருக்கு 360 இலட்சம் ரூபா எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பதில் சந்தேகம் உள்ளது.

ராஜபக்ஷக்கள் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி நாட்டு மக்களை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளார்கள். இவர்களின் சொத்து குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய சட்ட நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் குடும்பம் முறையற்ற சொத்து சேகரித்த விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதைப் போன்று ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.