பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான பிரேரணையை எதற்காக நிராகரித்தீர்கள்? – நாடாளுமன்றில் சபாநாயகரிடம் சஜித் கேள்வி.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களைச் சபைக்குச் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகரிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,
“பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தொடர்பில் எமக்குத் தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்து வருகின்றார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததன் பிற்பாடு, அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்களை இந்தச் சபைக்குச் சமர்ப்பிக்குமாறு கோருகின்றேன்.” – என்றார்.
